Skip to content
Home » கடலைக் கொள் முதலில் எடையை ஏமாற்றிய இடைத்தரகர்கள்… போராட்டத்தில் விவசாயிகள்…

கடலைக் கொள் முதலில் எடையை ஏமாற்றிய இடைத்தரகர்கள்… போராட்டத்தில் விவசாயிகள்…

அரியலூர் மாவட்டம் அங்கராயநல்லூர் கிராமத்தில் விவசாயிகள் கொள்முதல் செய்த நிலக்கடலையை எடையை ஏமாற்றி கொள்முதல் செய்த இடைத்தரர்கள் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் லாரி மற்றும் 3 பேரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அங்கராயநல்லூர் கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலக்கடலையை அறுவடை செய்து கொள்முதல் செய்வதற்கு ஆயத்தப் பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அறுவடை செய்யப்பட்ட நிலக்கடலையை ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் கொள்முதல் செய்து வருகின்றனர். ஆனால் அங்கு கொள்முதல் செய்கின்ற நிலக்கடலைக்கு உரிய பணத்தினை விவசாயிகளுக்கு தாமதமாக வழங்கப்படுகிறது என கூறப்படுகிறது. இதனை தனியார் இடைத்தரகர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கூடுதல் பணம் தருவதாக கூறி விவசாயிகளுக்கு வலை விரிக்கின்றனர். கொள்முதல் செய்கின்ற நிலக்கடலைக்கு பணம் உடனே கிடைக்கப் பெறுவதால் விவசாயிகளும் வேறு வழி இன்றி இடைத்தரகர்களிடம் கொள்முதல் செய்து வந்தனர்.

இந்த நிலையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் இடைத்தரகரான கார்த்திக் என்பவரிடம் விவசாயிகள் நிலக்கடலையை கொள்முதல் செய்து வந்துள்ளனர். ஆனால் எடையில் ஏதோ முறைகேடு நடப்பதாக சந்தேகம் அடைந்த விவசாயிகள் இந்த முறை ஏற்கனவே விவசாயிகள் எடை மெஷினில் சரி பார்த்துக் கொண்டு வந்த 55 எடை கொண்ட நிலக்கடலை மூட்டையை இடைத்தரகர்கள் கொண்டு வந்த மிஷினில் எடை போட்டபோது 42 கிலோ மட்டுமே காட்டியுள்ளது. இதில் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் பின்னர் எல்லா மூட்டைகளையும் எடைபார்த்த போது அதே அளவு எடை காட்டியுள்ளது. இதை அறிந்த தனியார் இடைத்தரகர் கார்த்திக் விவசாயிகளுக்கு பயந்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் அங்கு திரண்டு இருந்த விவசாயிகள் லாரி மற்றும் லாரியில் வந்திருந்த

ஊழியர்கள் 3 நபர்களையும் பிடித்து தா. பழூர் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் இது குறித்து விவசாயிகள் தெரிவிக்கையில்:- ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் கொள்முதல் செய்கின்ற நிலக்கடலைக்கு உரிய தொகையினை கால தாமதப்படுத்தாமல் உடனே கொடுத்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆனால் 15 நாட்களுக்கு பின்னர்தான் நிர்வாகம் பணம் வழங்குகிறது. இதனால் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி தனியார் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டிய சூழ்நிலை உள்ளதாக தெரிவித்தனர். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு அரசு வழங்க வேண்டும் இல்லையென்றால் அடுத்த கட்டமாக விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்துவோம் எனவும் எச்சரித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!