தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா வருசநாடு அருகே உள்ள கோடாலியூத்து என்ற கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரின் 14 வயது மகன் மயிலாடும்பாறை அரசு மேல்நிலைபள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவருடைய கிராமத்திற்கு போதிய பேருந்து வசதி இல்லாததால் மயிலாடும்பாறை கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை விடுதியில் தங்கி படித்து வருகிறார்.
இந்த நிலையில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு அந்த விடுதியின் காப்பாளர் ராமச்சந்திரன் என்பவர் அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாணவன் தனது தந்தையிடம் கூறியதும் அதிர்ச்சி அடைந்த தந்தை கோபாலகிருஷ்ணன், இந்த சம்பவம் குறித்து மயிலாடும்பாறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப்புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர், ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு விடுதி காப்பாளர் பாலியல் தொந்தரவு கொடுத்ததற்கான முகாந்திரம் இருப்பது உறுதியானதை தொடர்ந்து விடுதி காப்பாளர் ராமச்சந்திரனை காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது ராமச்சந்திரனுக்கு உயர்ரத்த அழுத்த கோளாறு ஏற்பட்டதால் உடனடியாக அவர், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உடல் நலம் தேறியதும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபடுவார் என காவல்துறையினர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.