Skip to content

ஏரி, குளங்கள் வறண்டு கிடக்கிறது….குறைதீர் கூட்டத்தில் தஞ்சை விவசாயிகள் குமுறல்

  • by Authour

தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கோட்டாட்சியர் செ.இலக்கியா தலைமை வகித்தார். கூட்டத்தில் வேளாண்துறை, கூட்டுறவுத்துறை, நீர்வளஆதாரத்துறை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:

பூதலூர் பாஸ்கர்: காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் இந்தாண்டு முறையாக நீர் மேலாண்மையை கையாளப்படாததால் கடலில் சென்று வீணாகியது. நீர்வழிப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் அனைத்தும் வறண்ட நிலையிலேயே காணப்படுகிறது.
ஒரு பக்கம் உபரிநீர் கடலில் வீணாகியது, மற்றொருபக்கம் நீர்நிலைகள் வறண்டே காணப்படுகிறது. இந்த பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்த வேண்டும். பூதலூர் வட்டாரத்தில் உள்ள 135 ஏரிகள் மற்றும் குளங்களுக்கு இதுவரை தண்ணீர் வரவில்லை. தண்ணீர் வருமா வராதா என தெரியவில்லை. இந்த பகுதியில் ஒரு போக சம்பா சாகுபடிக்காவது உரிய உத்திரவாதத்தை அரசு வழங்க வேண்டும்.

தங்கவேலு: ஒரத்தநாடு அருகே ஆம்பலாபட்டில் உள்ள 230 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆண்டாள் ஏரிக்கு இதுவரை தண்ணீர் வரவில்லை. சம்பா சாகுபடி தொடங்கியுள்ள நிலையில் போதிய அளவு விதை நெல் வேளாண்துறை மூலம் விநியோகம் செய்ய வேண்டும்.

கோட்டாட்சியர் இலக்கியா: விவசாயிகளின் கோரிக்கைகள் உடன் மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

இதுபோல கும்பகோணத்திலும் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டத்துக்கு கோட்டாட்சியர் புர்ணிமா ஏற்பாடு செய்திருந்தார். 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் காலை 10.30 மணிக்கே வந்து விட்டனர். 11.30 மணி வரை கோட்டாட்சியர் வரவில்லை. இதனால் விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து விட்டு சென்று விட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!