தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களை கொண்ட ஒரு அமைப்பாகும். இவர்கள் அனைவரும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தமிழக ஆளுநரால் நியமனம் செய்யப்படுகின்றனர். டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்து வந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான கா.பாலச்சந்திரனின் பதவிக்காலம் 2022ம் ஆண்டு ஜூன் மாதம் 9ம் தேதியுடன் முடிவடைந்தது.
இதைத் தொடர்ந்து உறுப்பினராக இருந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ச.முனியநாதன் டிஎன்பிஎஸ்சியின் பொறுப்பு தலைவராக நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வந்தார். அதேநேரத்தில் காலியாக இருந்த தலைவர் பதவிக்கு, முன்னாள் போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபுவின் பெயரை தமிழக அரசு பரிந்துரைத்தது. ஆனால் இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்து வந்தார். இந்நிலையில், டிஎன்பிஎஸ்சிக்கு தலைவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தன.
அதே நேரத்தில் டிஎன்பிஎஸ்சியில் காலியாக உறுப்பினர் பணியிடத்தில் 5 பேர் கடந்த ஜனவரி மாதம் 19ம் தேதி நியமிக்கப்பட்டனர். அதாவது, முன்னாள் ஓய்வு பெற்ற ஐஏஏஸ் அதிகாரி ம.ப.சிவன்அருள், ஓய்வு பெற்ற இந்திய வருவாய் பணி அதிகாரி இரா.சரவணகுமார், டாக்டர் அ.தவமணி, உஷாசுகுமார், பிரேம்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு டிஎன்பிஎஸ்சிக்கு தலைவராக ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக எஸ்.கே.பிரபாகர் இன்று பொறுப்பேற்றார். டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகளை தாமதிக்காமல் விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்வர்களுக்கு குழப்பம் ஏற்படுவதை தவிர்க்க வெளிப்படைத்தன்மையுடன் உடனுக்குடன் தகவல் தெரிவிக்கப்படும் என பிரபாகர் தெரிவித்துள்ளார்.