Skip to content

அரியலூர்..43 மாணவ, மாணவிகளுக்கு ரூ.3.09 கோடி மதிப்பில் கல்வி கடனுதவி….

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னணி வங்கிகளின் சார்பில் நடைபெற்ற கல்வி கடன் மேளாவில் 43 மாணவ, மாணவிகளுக்கு ரூ.3.09 கோடி மதிப்பில் கடனுதவிக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க, அரியலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு Diploma மற்றும் ITI படிப்பதற்கும், 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு பட்டப்படிப்பு படிப்பதற்கும், கல்லூரிகளில் முதலாமாண்டு முதல் நான்காமாண்டு வரை படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், முதுகலை கல்வி படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவிகளுக்கும் கல்வி கடன் மேளா /சிறப்பு முகாம் அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி தலைமையில் இன்றையதினம் நடைபெற்றது. அதன்படி இம்முகாமில் பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, கனராவங்கி உள்ளிட்ட 13 வங்கிகள் பங்கேற்றது. 110 எண்ணிக்கையிலான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவற்றில் 29 மாணாக்கர்களின் விண்ணப்பங்கள் உடனடி பரிசீலனையில் உள்ளது. மேலும், வித்யலஷ்மி இணையதளத்தின் மூலம் விண்ணப்பம் செய்தவர்களில் 43 மாணவ, மாணவிகளுக்கு ரூ.3.09 கோடி மதிப்பில் பொறியியல், மருத்துவம், செவிலியர் உள்ளிட்ட கல்விகளுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டது. மேலும் கல்வி கடனுதவி தேவைப்படும் மாணாக்கர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.

மாணவ, மாணவிகளுக்கான கல்வி கடன் மேளாவினை தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி பேசியதாவது,

அரியலூர் மாவட்டத்தில் மாணவர்களின் நலனுக்காக கல்வி கடன் மேளா இன்றையதினம் மிகவும் சிறப்பான முறையில் நடத்தப்பட்டுள்ளது. கல்வி கடன் என்பது மிகச்சிறப்பான திட்டம். எந்தவொரு மாணாக்கர்களும் பொருளாதார சூழலின் காரணமாக கல்வி பயில முடியாத நிலை ஏற்படக்கூடாது என்ற எண்ணத்திலும், அவர்களின் வாழ்கை முன்னேற்றத்திலும், வளர்ச்சியிலம் எவ்வித தடைகளும் ஏற்படாமல் இருக்கவும் இத்தகைய கல்வி கடனுதவி முகாம்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னணி வங்கிகளின் சார்பில் நடத்தப்படுகிறது. அரியலூர்

மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் கல்வி கடன்களை எந்தவித சிரமமின்றி பெறும் வகையில் அவர்களை ஓரிடத்தில் ஒருங்கிணைத்து கல்வி கடன் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கடனுதவிகள் வழங்கப்படுகிறது. கல்வி கடனுதவிகள் தேவைப்படும் மாணவ, மாணவிகளுக்கு அதனை நிறைவேற்றி தரும் வகையிலும், அவர்கள் கல்வி பயின்று முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் இம்மாதிரியான கல்வி கடன் மேளாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

மாணவ, மாணவிகள் கல்வி கடனுதவிகளை பெற்று, நல்லமுறையில் கல்விபயின்று, வேலைவாய்ப்பினைப் பெறவேண்டும். மேலும் கல்வி பயில்வதற்கு கடனுதவிகள் வழங்கிய வங்கிகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றவுடன் அதனை மீள செலுத்தவேண்டும். அப்பொழுதுதான் வங்கிகள் உங்களுக்கு அடுத்தாக கல்வி பயிலும் மாணாக்கர்களும் இத்தகைய கடனுதவிகளை வழங்க இயலும். எனவே அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் இம்முகாமினைப் பயன்படுத்தி கடனுதவிப் பெற்று, கல்வி பயின்று வாழ்கையில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சங்கர சுப்பரமணியன், வங்கி மேலாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!