தஞ்சை மாவட்டம் பேராவூரணி ரெட்டவயல் கிராமத்தில் கண்ணப்புடையார்கோவில் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இந்த கோவில் திருவிழா பந்தோபஸ்துக்காக தஞ்சையில் இருந்து ஆயுதப்படை போலீசார் வரவழைக்கப்பட்டு இருந்தனர். ஆயுதப்படை பெண் காவலர் சுபபிரியா(23)வும் பாதுகாப்புக்கு வந்திருந்தார்.
அவர் பாதுகாப்பு பணி முடிந்து அங்குள்ள மண்டபத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த தண்டாயுதபாணி(43) என்ற கூலித் தொழிலாளி போதையில் தாறுமாறாக பைக்கில் வந்து பெண் போலீஸ் சுபபிரியாவின்மீது மோதினார்.
இதில் சுபபிரியா தலைகுப்புற விழுந்தார். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் நேற்றுஇறந்தார். இது குறித்து பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்டாயுதபாணியை கைது செய்தனர்.
இறந்துபோன சுபபிரியா, கடந்த வருடம் தான் போலீஸ் பணியில் சேர்ந்தார். இவர் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகா பெரியநாயகிபுரம் என்ற கிராமத்தை சேர்ந்த விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.