கோவை மருதமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இரண்டு ஆண் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகள் மாலை மற்றும் காலை நேரங்களில் மருதமலை சாலையில் உலா வருவதால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கவனமாக செல்ல வேண்டும் என வனத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும் இந்த யானைகள் இரவு நேரங்களில் ஐ.ஓ.பி காலனி குப்பேபாளையம் பகுதிகளில் குடியிருப்பு பகுதிக்குள் நடமாடுவதால் பொதுமக்கள் இரவு நேரங்களில் அவசியம் இன்றி வெளியே சுற்ற வேண்டாம் எனவும் வனத் துறையினர் அறிவிப்பு கொடுத்து உள்ளனர். இந்நிலையில் ஐ.ஓ.பி காலனிக்குள் ஆண் யானை ஒன்று உணவு தேடி வெறித்தனமாக குடியிருப்பு பகுதியில் சுற்றி வந்தது.
இது குறித்து வனத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து அங்கு வந்த வனத் துறையினர் இரண்டு ஜீப்புகளில் வந்து ஒலி எழுப்பி அந்த யானையை வனப் பகுதிக்கு விரட்டினர். அதேபோன்று மருதமலை சாலையை மற்றொரு ஆண் யானை கடப்பதாக தகவல் கிடைத்து அடுத்து அங்கு சென்ற வனத் துறையினர் அதனையும் வனப் பகுதிக்குள் திருப்பி அனுப்பினர். இந்நிலையில் இந்த இரண்டு யானைகளும் குடியிருப்பு பகுதியில் சுற்றி வரும் வீடியோ அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்தார். அந்த வீடியோ காட்சிகள் சமூக வளைதளங்களில் தற்பொழுது வேகமாக பரவி வருகிறது.