அமெரிக்காவின் ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனம் உலகம் முழுதும் கடை திறந்து விதவிதமான காபி வகைகளை விற்பனை செய்கிறது. இந்நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தையாக அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா உள்ளது. இந்நிறுவனத்தின் சி.இ.ஓ., எனப்படும், தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியான லக்ஷ்மன் நரசிம்மன் ஓராண்டுக்கு முன் பொறுப்பேற்றார். குறைந்து வரும் விற்பனையை அவர் சரிசெய்ய தவறியதால், அவரை நீக்கிவிட்டு புதிய சி.இ.ஓ.,வாக பிரைன் நிக்கோல், 50, என்பவரை ஸ்டார்பக்ஸ் தேர்வு செய்துள்ளது. பிரச்னையில் உள்ள நிறுவனங்களை சரிசெய்வதில் பெயர் பெற்றவரான இவருக்கு அமெரிக்க நிறுவனங்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது. எனவே, ‘சிப்போட்டில் மெக்சிகன் கிரில்’ நிறுவனத்தின் சி.இ.ஓ.,வாக இருந்த பிரைன் நிக்கோலை, ஸ்டார்பக்ஸ் நிறுவனம் பல கவர்ச்சிகர சலுகைகளை தந்து தங்கள் நிறுவனத்துக்கு இழுத்துள்ளது. இவருக்கு அடிப்படை சம்பளம், பங்குகள், செயல்திறன் போனஸ் என ஆண்டுக்கு 260 கோடி ரூபாய் வரை வழங்க உள்ளனர். பிரைன் நிக்கோல் கலிபோர்னியாவில் உள்ளார். ஸ்டார்பக்ஸின் தலைமை அலுவலகம் அவரது வசிப்பிடத்தில் இருந்து 1,600 கி.மீ., அப்பால் சியாட்டிலில் உள்ளது. தினமும் அலுவலகம் சென்று வர நிறுவனத்தின் ஜெட் விமானத்தை பயன்படுத்தவும் பிரைன் நிக்கோலுக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.