கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது . அங்கு நடைபெற்ற போலி என்சிசி முகாமில் கலந்து கொண்ட சில பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகினர். இது தொடர்பான புகாரில் நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமன், பள்ளி முதல்வர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் என 10க்கும் மேற்பட்டோர் காவல்துறையால் கைதாகியுள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது ஓர் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில், கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிகளுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி விசாரணை நடத்த ஒரு சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக்குழு தலைவராக காவல்துறை அதிகாரி பவானீஸ்வரி ஐபிஎஸ் செயல்படுவார் என்றும்,
அவர் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு, சம்பவம் குறித்து முழு விசாரணை மேற்கொண்டு 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், அதே போல, இதுபோன்ற சம்பவம் இனி நடைபெறாமல் இருக்க சமுக நலத்துறை சார்பில் ஒரு பல்நோக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும், அந்த குழுவானது சம்பவம் நடந்த சூழல், அதனை தடுக்கும் வழிமுறைகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
போலி என்சிசி முகாமில் பள்ளி மாணவிகளுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த சம்பவத்தில் காவல்துறை முன்னெடுத்த நடவடிக்கைகள், மாநில அரசு முன்னெடுத்த நடவடிக்கைகள் ஆகியவற்றை அறிக்கையாக தயார் செய்து 3 நாட்களுக்குள் மகளிர் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.