அரசு வேலை வாங்கித் தர பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராகவும், ஜாமீன் கோரியும் செந்தில் பாலாஜி தாக்கல் மனுவின் விசாரணையை முடித்திருந்த உச்சநீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
தீர்ப்பு எப்போது வரும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணையில், செந்தில் பாலாஜி மீது நிலுவையிலுள்ள 3 வழக்குகள் மீதும் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொள்ளுமா? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதனிடையே, போக்குவரத்துத் துறையில் 2,175 இடங்கள் முறைகேடாக நிரப்பப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமலாக்கத்துறை தரப்பில் விளக்கம் அடங்கிய குறிப்பு நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் தேதியை குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்துள்ளது. செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டு மீதான விசாரணையை தனித் தனியாக பிரித்து பார்க்க வேண்டும் என்ற அமலாக்கத்துறையின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.