மேற்கு வங்கத்தின் கோல்கட்டா மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நாடெங்கும் எதிரொலிக்கும் இச்சம்பவத்தில் மேற்கு வங்க அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பாஜக மட்டுமல்லாது ‘இண்டி’ கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் இச்சம்பவத்தில் திரிணமுல் காங்கிரஸ் அரசை குறை கூறுவதால், முதல்வர் மம்தா உச்ச கட்ட டென்ஷனில் உள்ளார். மம்தா அரசையும், காவல் துறையையும் கோல்கட்டா உயர் நீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில், இப்போது உச்ச நீதிமன்றமும் தாமாக முன்வந்து இச்சம்பவத்தை விசாரணைக்கு எடுத்துஉள்ளது.இதனால் மம்தா அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று டில்லி புறப்பட்ட கவர்னர் சி.வி. ஆனந்த போஸ், இன்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து மாநில சட்டம், ஒழுங்கு தற்போதைய சூழ்நிலை குறித்து விவரிக்கிறார்.