Skip to content
Home » திருச்சி அருகே லாரியிலிருந்த ரூ.50 லட்சம் திருட்டு…. 5 பேர் அதிரடி கைது.

திருச்சி அருகே லாரியிலிருந்த ரூ.50 லட்சம் திருட்டு…. 5 பேர் அதிரடி கைது.

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல்காரபாளையம் தனியார் டிபன் சென்டர் அருகே கடந்த 3 ஆம் தேதி மாலை , கும்பகோணம் தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் காய்கறி இறக்கி விட்டு திரும்ப வைக்கோல் லோடு ஏற்றிக்கொண்டு வந்த லாரியை நிறுத்திவிட்டு லாரி டிரைவர் ஆனந்த் மற்றும் உடன் வந்த லோகேஸ்வரன் ஆகிய இருவரும் தேநீர் அருந்த சென்றுள்ளனர்.

லாரி டிரைவர் ஆனந்தும், லோகேஸ்வரனும் தேநீர் அருந்திவிட்டு லாரிக்கு வந்து கொண்டிருந்தபோது லாரியில் இருந்து அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் அரிவாளுடன் இறங்கி ஓடியுள்ளனர். அவர்களை இருவரும் விரட்டி சென்ற போது காரில் ஏறி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். லாரி டிரைவர் ஆனந்தும், லோகேஸ்வரனும் ஓடி சென்று லாரியின் உள்ளே பார்த்தபோது கும்பகோணத்தில் காய்கறி லோடு இறக்கிவிட்டு வாங்கி வைத்திருந்த ரூ.50,68,200/- பணத்தை தப்பி சென்ற மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டது தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் பெட்டவாய்த்தலை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (சைபர் கிரைம்) கோடிலிங்கம் மேற்பார்வையில், ஜீயபுரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாலசந்தர் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவி எண்ணிற்கு நவலூர் குட்டப்பட்டு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சிலர் காரில் சுற்றி திரிவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில், தனிப்படையினர் நவலூர் குட்டப்பட்டு அரியாற்று பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்ருந்த காரின் அருகே சென்றபோது காரில் இருந்து இறங்கி ஓடி அரியாற்று பாலத்தில் இருந்து குதித்து தப்பிக்க முயன்ற ஐந்து நபர்களையும் தனிப்படையினர் சுற்றிவளைத்து கைது
செய்தனர்.

அந்த நபர்களை தீவிர விசாரணை செய்ததில், 1) தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த பிரவீன் குமார் , 2) அதே பகுதியை சேர்ந்த போஸ் (எ)இசக்கிமுத்து ,3)திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த வெள்ளை பாண்டி , 4) திருநெல்வேலி மேல காடுவெட்டியை சேர்ந்த முத்து மணிகண்டன் , மற்றும் 5) மதுரையை சேர்ந்த சூர்யா (எ) உதயநிதி ஆகிய ஐந்து நபர்களும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என தெரிய வந்ததை அடுத்து அவர்களிடம் இருந்து லாரியில் இருந்து திருடி சென்ற பணத்தில் ரூ. 26,00,000/-ஐ மீட்டு குற்ற சம்பவத்தில் பயன்படுத்திய காரினை கைப்பற்றியும், ஐந்து நபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!