சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு.. தமிழக பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்றும், நாளையும் பெரும்பாலான இடங்களிலும், 20-ம் தேதி ஒருசில இடங்களிலும், 21 முதல்23-ம் தேதி வரை ஓரிரு இங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழையும், கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. நாளை கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி,திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். சென்னை, புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லதுமிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 8 செ.மீ., நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தலா 7 செ.மீ., கரூரில் 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் அதிகபட்சமாக 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
