திருச்சி மாநகரில் இன்று மாதாந்திர பராமரிப்புக்காக மின்தடை செய்யப்படுகிறது என அறிவிப்பு வெளியிடப்பட்டது. பின்னர் இன்று காலை மின்தடை இல்லை என்ற அறிவிப்புகள் வெளியானது. ஆனால் திருச்சி மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் இன்று திடீரென மின்தடை செய்யப்பட்டது. குறிப்பாக கருமண்டபம், ஆர்எம்எஸ் காலனி போன்ற பகுதியில் காலை 9.45 மணிக்கு மின்சாரம் தடை செய்யப்பட்டது. பின்னர் 45 நிமிடம் கழித்து மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டது.
அதன்பிறகு நண்பகல் 12.45 மணிக்கு ஆர்எம்எஸ் காலனி பகுதியில் மீண்டும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 30 நிமிடமாக மின்சார துண்டிப்பு நீடித்ததால் கருமண்டபம் மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, டிரான்ஸ்பார்மர் மாற்றப்படுவதாக கூறினார்கள்.
டிரான்ஸ்பார்மர் மாற்றுவதாக இருந்தால் முன்னறிவிப்பு செய்து மின்தடை ஏற்படுத்தி அதனை சீரமைக்கலாம். மின்தடை முன்னறிவிப்பு செய்தால் மக்கள் அதற்கு ஏற்ப தங்கள் பணிகளை மாற்றி அமைத்துக்கொள்வார்கள். எனவே மின்வாரியம் இதுபோன்று மின்தடை ஏற்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் அது குறித்து மக்களுக்கு அறிவித்தால் மக்கள் ஓரளவு தங்களை தயார்படுத்திக்கொள்வார்கள். இத்தனைக்கும்இந்த பகுதி அமைச்சர் நேருவின் தொகுதிக்கு உட்பட்ட பகுதி.
அரசு நிர்வாகத்தில் சிறிய தாமதம், இடையூறு ஏற்பட்டால் உடனடியாக அரசாங்கத்தை தான் மக்கள் குறைகூறுகிறார்கள். எனவே அரசுக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என அதிகாரிகள் செயல்படாமல் இருக்க வேண்டும் என்பது தான் கருமண்டபம், ஆர்எம்எஸ் காலனி பகுதி மக்களின் கோரிக்கை
இதுபோன்று முசிறி நகரில் சிவன்கோவில் பீடரில், மழை ஒரு சொட்டு விழுந்தாலோ, மரம் லேசாக அசைந்தாலோ, இடி மின்னல் தெரிந்தாலோ உடனடியாக மின்சாரத்தை தடை செய்து விடுவார்கள். மழைக்கான அறிகுறியே இல்லாத நிலை ஏற்பட்டாலும் மின் இணைப்பு மீண்டும் வராது. மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டாலும் போனை எடுக்கமாட்டோம் என்பதில் மின்வாரியத்தில் உறுதியாக இருப்பார்கள்.இது தான் காலம் காலமாக முசிறியில் நிலை. இவர்களுக்கு உயர் அதிகாரிகள் தக்க அறிவுரை வழங்க வேண்டும் என்பதே முசிறி மக்களின் கோரிக்கை