கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணிமலை, தெற்கு தெருவில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. தாழ்வான பகுதியாக உள்ள அந்த தெருவில், நேற்று இரவு கரூரில் பெய்த கனமழையின் காரணமாக 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் முழங்கால் அளவு தண்ணீர் உப்புகுந்து, குடியிருப்புகளை சூழ்ந்ததால், அப்பகுதியினர் பெரும் அவதி அடைந்துள்ளனர்.
குறிப்பாக குடியிருப்புகளுக்கு நடுவில் அமைந்துள்ள மழை நீர் வடிகாலில் அருகில் அமைந்துள்ள வெங்ககல்பட்டி, காளியப்பனூர், முத்தலாடம்பட்டி,
தென்றல் நகர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் மழை நீர் தங்கள் பகுதிக்கு வருவதால், வடிகால் நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்து வருவது தொடர்கதையாக உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கரூர் – திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அரசு கலைக் கல்லூரி அருகில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தாந்தோணிமலை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
மழைநீர் வடிகால் பிரச்சனையால் மழைக்காலங்களில் பெரும் துயரத்துக்கு ஆளாகுவது 20 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருவதாகவும், பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் மெத்தன போக்கோடு செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு வைத்தனர்