நாகை – இலங்கை இடையே சிவகங்கை என்ற பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை தொடங்குகிறது. நாகையில் நாளை காலை 10 மணிக்கு புறப்படும் கப்பல் காங்கேசன்துறைக்கு பிற்பகல் 2 மணிக்கு சென்றடையும். ஆக.17 காலை 10 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து கப்பல் புறப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு நாகை வந்தடையும்.
நாகை-இலங்கை பயணிகள் கப்பலின் வழக்கமான சேவை ஆக. 18 முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக.18 முதல் நாகையில் காலை 8 மணிக்கு கப்பல் புறப்பட்டு பகல் 12 மணிக்கு இலங்கையை சென்றடையும். ஆக.18 முதல் இலங்கையில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு கப்பல் புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகை வந்தடையும். இலங்கைக்கு கப்பலில் பயணம் செய்ய www.sailindsri.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பலில் செல்ல ரூ.5,000 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எகனாமி பிரிவில் ரூ.5,000 கட்டணமும், பிரீமியம் எகனாமி பிரிவில் செல்ல ரூ.7,500 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.