இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தின விழா இன்று நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். உலகெங்கும் சமாதானம் நிலவும் வகையில் வெண்புறாக்கலை மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் ஆகியோர் பறக்க விட்டனர். இதனையடுத்து தேசியத்தை நினைவுபடுத்த வகையில் மூவர்ண பலூன்களை பறக்க விட்டனர். பின்னர் திறந்த ஜீப்பில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பபை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் ஆகியோர் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.
இதனையடுத்து காவல்துறையினர் சார்பில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உள்ளிட்ட 45 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களையும், மேலும் சிறப்பாக செயல்பட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்களுக்கு சிறந்த பணியாளருக்கான பாராட்டு சான்றிதழ்களையும் மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி வழங்கினார். மேலும் விழாவில் பல்வேறு துறைகள் சார்பில் 104 பயனாளிகளுக்கு 5 கோடியே 71 லட்சத்து 86 ஆயிரத்து 894 ரூபாய் மதிப்பான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி வழங்கினார். பின்னர் தேசப்பற்றை விளக்க வகையில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, சிறந்ததாக தேர்வு செய்யப்பட்ட மூன்று பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.