Skip to content
Home » மலிவு விலை மருந்து…….1000 முதல்வர் மருந்தகம்…. பொங்கல் முதல் செயல்படும்… ஸ்டாலின் அறிவிப்பு

மலிவு விலை மருந்து…….1000 முதல்வர் மருந்தகம்…. பொங்கல் முதல் செயல்படும்… ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை கோட்டையில் 78வது சுதந்திர தின விழா  விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 8.45 மணிக்கு  விழா நடைபெறும் இடத்திற்கு வந்தார். அவரை தலைமைச்செயலாளர்  சிவதாஸ் மீனா வரவேற்று, முப்படை தளபதிகளையும், மற்ற  உயர் போலீஸ் அதிகாரிகளையும்  அறிமுகம் செய்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து திறந்த ஜீப்பில்  சென்று    காவல்துறை அணிவகுப்பை பார்வையிட்டார்.  சரியாக 9 மணிக்கு  கோட்டை கொத்தளத்தில்  முதல்வர் கொடியேற்றினார்.  பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

விடுதலைப்போராட்ட வீரர்களை வணங்குகிறேன். தியாகிகளை போற்றுவோம். அவரது குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.  அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். எதற்காக சுதந்திரம் பெற்றோமோ, அதற்காக நாளும் உழைப்போம்.  ரத்தத்தை வியர்வையாக தந்து எண்ணற்ற தியாகிகள்  இந்த சுதந்திரத்தை பெற்றார்கள். தமிழ்நாட்டிலும் ஏராளமான தியாகிகள் உண்டு.

நேதாஜியின் படையில் சேர்ந்து அவருடன் கைகோர்த்தவர்கள் தமிழ்நாட்டில் உண்டு. அண்ணல் காந்தியடிகள் பின்னால் இந்தியா அணிவகுத்தது. தமிழ்நாடும் கைகோர்த்து நின்றது.   நாம் ஆகஸ்ட் 15ல் விடுதலை காற்றை சுவாசித்தோம். நமது கொடி ஒரு வண்ணம் அல்ல மூவர்ணக்கொடி. அது பன்முகத் தன்மை கொண்டது.  ஆகஸ்ட் 15 என்பது ஆனந்த சுதந்திரம் பெற்ற நாள் மட்டுமல்ல, ரத்தத்தை கொடையாக தந்து பெற்ற சுதந்திரம். 300 ஆண்டு கால போராட்டத்திற்கு பின் கிடைத்த சுதந்திரம் இது.

சுதந்திர தினத்தில் தேசிய கொடி ஏற்றும் உரிமையை, 50 ஆண்டுகளுக்கு முன்னால் 1974ல்  பெற்று தந்தவர் கலைஞர் அவர்கள். இதுவும் ஒரு விடுதலை போராட்டம் தான். மாநிலங்களுக்கு அதிக  உரிமை வேண்டும்  நானும் 4வது ஆண்டாக தேசிய கொடி ஏற்ற வாய்ப்பு பெற்றமைக்காக பெருமை அடைகிறேன். தமிழ்நாட்டின் மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.சுதந்திர போராட்ட தியாகிகளின்  நோக்கத்தை நிறைவேற்றுவோம்.  தியாகிகளை போற்றுவோம். விடுதலை போராட்ட தியாகிகளை போற்றும் வகையில் சிலைகள் நிறுவி உள்ளோம்.

எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தியாகிகளை போற்றி வருகிறோம்.  வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்லாமல் சமூக வளர்ச்சியாகவும் இருக்க வேண்டும்.  தமிழ்நாடு கடந்த 3 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ளது.  உயர்கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.  திராவிட மாடல் ஆட்சி  திட்டங்களால் பெண்களின் பொருதார விடுதலைக்கு வித்திட்டுள்ளோம்.   வரும்  2026 ஜனவரிக்குள் 75 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும். கடந்த 3 ஆண்டுகளில் 65 ஆயிரம் பேருக்கு அரசு பணியிடம் கிடைத்துள்ளது.

எல்லோருக்கும் எல்லாம் என்பது தான் திராவிட மாடல் அரசின் நோக்கம்.  இந்த நாளில் சில அறிவிப்புகளை வெளியிடுவதில் மகிழ்ச்சி  அடைகிறேன்.  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மக்கள் நீரழிவு, போன்ற நோய்களுக்கு தொடர்ந்து மருந்து வாங்க வேண்டி இருப்பதால், குறைந்த விலையில் மருந்து கிடைக்க முதல்வர் மருந்தகம்   என்ற பெயரில் மருந்தகம் தொடங்கப்படும். வரும் பொங்கல் முதல்  இது செயல்படும். முதல்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகம் செயல்படும்.  இந்த மருந்தகம் தொடங்க  ரூ. 3 லட்சம் மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படும். முன்னாள்  படை வீரர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி கடன் வழங்கப்படும். 30 % மானியம், 100% வட்டி மானியம் வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசு வழங்கும் தியாகிகள்  பென்சன்  20 ஆயிரம் ரூபாயில் இருந்து 21 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.   தியாகிகள் குடும்ப பென்சன்  ரூ.11 ஆயிரம், இனி  11500 ஆக உயர்த்தி வழங்கப்படும். கட்டபொம்மன், வஉசி,   மருது சகோதரர்கள், ராமநாதபுரம் மன்னர் வழித்தோன்றல்களுக்கு இப்போது ரூ.10 ஆயிரம் வழங்கப்படுவதை இனி 10500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர்  குமரி அனந்தனுக்கு  தகைசால் தமிழர் விருதை முதல்வர்  மு.க. ஸ்டாலின் வழங்கினார்.   தமிழ்நாட்டை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி சந்திரயான் 3 திட்ட இயக்குனர்,  வீர முத்துவேலுக்கு அப்துல் கலாம் விருது வழங்கினார். மற்றும்  பல்வேறு விருதுகளை முதல்வர் வழங்கி சிறப்பித்தார்.  பின்னர் வீரர்கள், விருதாளர்களுடன் முதல்வர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். விழாவில் முதல்வரின் துணைவியார் துர்கா ஸ்டாலின் மற்றும்  சபாநாயகர் அப்பாவு, அனைத்து அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், நீதிபதிகள் பங்கேற்றனர்.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!