கரூர் மாவட்டம், குளித்தலை காவேரி நகரைச் சேர்நதவர் தாமஸ் குணாளன். இவர், டெல்லியில் உள்ள ஒரு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மூலம் பிரபல நிறுவனம் தயாரித்த வாசிங் மெஷினை, பிளிப்கார்ட் ஆன்லைன் விற்பனை நிறுவனத்தின் மூலம் ரூ. 30,449 ரூபாய்க்கு கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் 9ம்தேதி வாங்கியுள்ளார்.
வாஷிங்மெசின் இவரின் முகவரிக்கு வந்த போது, வீட்டில் பொருத்த முடியாத அளவில் ஒடுங்கி சேதமடைந்து இருந்துள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தெரிவித்த போதும், நிறுவனத்தினர் சரிசெய்து தரவில்லை. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான தாமஸ் குணாளன், ஆன்லைன் மற்றும் இ-மெயில் மூலமாகவும் குறைகளை தெரிவித்தும் சரி செய்யப்படவில்லை.
இதன் காரணமாக தாமஸ் குணாளன், கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரை விசாரணை மேற்கொண்ட ஆணைய தலைவர் பாரி, உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர், மன உளைச்சலுக்கு ஆளான தாமஸ் குணாளனிடம் இருந்து நிறுவனத்தினர் வாசிங் மெஷினை திரும்ப பெற்றுக் கொண்டு, பொருளின் விலை ரூ.30.449ஐ 12 சதவீத ஆண்டு வட்டியுடனும், இழப்பீடாக ரூ.30 ஆயிரம் மற்றும் வழக்கு செலவுத் தொகையாக ரூ. 5 ஆயிரம் என மொத்தம் ரூ. 65,449-ஐ சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் 3 மாத காலத்திற்குள் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.