ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் எஸ்விஎம் என்ற தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் நோட்டீஸ் பலகையில் கல்லூரி முதல்வர் கையெழுத்துடன் ஒட்டப்பட்ட நோட்டீஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நோட்டீசில் காதலர் தினமான பிப்ரவரி 14-ம் தேதிக்குள் மாணவிகள் அனைவரும் குறைந்தது ஒரு பாய் பிரண்ட் கட்டாயம் வைத்துக்கொள்ள வேண்டும் கூறப்பட்டுள்ளது. கல்லூரி முதல்வர் கையெழுத்துடன் ஒட்டப்பட்ட அந்த நோட்டீசில், பிப்ரவரி 14-ம் தேதிக்குள் அனைத்து மாணவிகளும் கட்டாயம் குறைந்தது ஒரு ‘பாய் பிரண்ட்’ வைத்துக்கொள்ள வேண்டும். இது பாதுகாப்பு காரணங்களுக்காக மேற்கொள்ளப்படுகிறது. பாய் பிரண்ட் இல்லாமல் தனியாக வரும் (சிங்கிள்) மாணவிகள் கல்லூரி வளாகத்திற்குள் நுழைய அனுமதியில்லை. மாணவிகள் தங்கள் ‘பாய் பிரண்ட்’ உடன் சமீபத்தில் எடுத்த புகைப்படத்தை காட்டவேண்டும். அன்பை பரப்புங்கள்’ என்று அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த நோட்டீசிற்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் அதில் கல்லூரி முதல்வரின் கையெழுத்தும் இடம்பெற்றிருந்தது. இதை கண்ட மாணவ-மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து ஆசிரியர்கள், கல்லூரி முதல்வரிடம் தகவல் கொடுத்த நிலையில் தனது கையெழுத்தை யாரோ தவறாக பயன்படுத்தியுள்ளனர் என்றும் தனது கையெழுத்துடன் போலியாக நோட்டீஸ் ஓட்டியுள்ளனர் என்றும் அவர் கூறினார். மேலும், இது குறித்து கல்லூரி முதல்வர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த செயலில் ஈடுபட்டது யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.