கரூர் மாவட்டம் கிருஷ்ண ராயபுரம் வட்டம் பூவம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் குமரேஷ் வயது 25. இவர் கரூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். குமரேஷ் தனது தந்தையின் நண்பர் பாண்டியன் என்பவரிடமிருந்து தான செட்டில்மெண்ட் மூலம் கிடைத்த மூன்று சென்ட் நிலத்திற்கு வரி நிர்ணயம் செய்வதற்கு சம்பந்தப்பட்ட பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி அலுவலகத்திற்கு 27.7.2024 அன்று சென்று விண்ணப்பம் செய்துள்ளார்.
பேரூராட்சி அலுவலகத்தில் இருந்த கிளார்க் சிவகுமார், குமரேஷ் மனுவை பெற்றுக்கொண்டு மூன்று நாட்கள் கழித்து குமரேஷ் வீட்டுக்கு சென்று வீட்டினை அளந்து விட்டு அலுவலகத்திற்கு வந்து தன்னை பார்க்குமாறு கூறிச் சென்றுள்ளார்.
பின்னர் 9.8.2024 அன்று குமரேஷ் பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று கிளார்க் சிவகுமாரை சந்தித்து வரி நிர்ணயம் குறித்து கேட்டுள்ளார் அதற்கு கிளர்க் சிவகுமார் உங்களது இடத்திற்கு 13,000 வரி நிர்ணயம் செய்ய வேண்டி வருகிறது அத்துடன் 17,000 சேர்த்து 30,000 கொடுத்தால் வரியை நிர்ணயம் செய்து
(கிளார்க் சிவகுமார்)
கொடுப்பதாக கூறியுள்ளார். அதற்கு குமரேஷ் தொகை அதிகமாக உள்ளது என்று சிவகுமாரிடம் கேட்டதற்கு இ.ஓ. ராஜகோபாலை பார்த்து பேசிக் கொள்ளுங்கள் என்று சொன்னதன் பேரில் இ.ஓ. ராஜகோபாலை சந்தித்து சிவகுமார் லஞ்ச பணம் கேட்ட விபரத்தை குமரேஷ் சொன்னதற்கு சிவக்குமார் கேட்ட பணத்தை கொடுத்துவிட்டு உனது வேலையை முடித்துவிட்டு போ என்று இ.ஓ. ராஜகோபால் கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத குமரேஷ் கரூர் லஞ்ச ஒழிப்பு அலுவலகம் சென்று அங்கிருந்த திருச்சி டிஎஸ்பி மணிகண்டன் ( பொ) கரூர் என்பவரிடம் நடந்த விவரத்தை தெரிவித்து புகார் அளித்துள்ளார். அதன் பேரில் பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜகோபால் மற்றும் கிளார்க் சிவக்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். லஞ்ச ஒழிப்புத் துறையினரின் ஆலோசனையின் பேரில் இன்று 12. 8. 2024 காலை 11 மணியளவில் குமரேசிடமிருந்து 17,000 லஞ்சப் பணத்தை இ.ஓ. ராஜகோபால் மற்றும் கிளார்க் சிவகுமார் பெற்றபோது அவர்களை கையும் களவுமாக அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மணிகண்டன் இன்ஸ்பெக்டர் தங்கமணி மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.