தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். ஏறத்தாழ 14 மாதங்களாக அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட செந்தில்பாலாஜியின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு அவரது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில் இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டு இழுத்தடிக்கப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜாமீன் வழங்க வேண்டும் என கூறினார். நீதிபதி ஓகா கூறியதாவது:
ஊழல் வழக்கில் விசாரணை முடியாமல். அமலாக்கத்துறை வழக்கில் தண்டிக்க சட்டம் அனுமதிக்கிறதா?, ஊழல் வழக்கில் இருந்து செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்டு விட்டால் பண மோசடி வழக்கு என்னவாகும்?.
இந்த வழக்கில் எத்தனை சாட்சிகள் உள்ளனர் . எப்போது வழக்கை முடிப்பீர்கள், வழக்கு முடியும் வரை ஒருவரை சிறையிலேயே வைத்திருக்க முடியாது . அரசியல் சாசனப்பிரிவு 21ன் படி, டில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது செந்தில் பாலாஜிக்கு பொருந்துமா? ஜாமீன் வழக்கு என்பதால் அது குறித்து முதலில் முடிவெடுக்க விரும்புகிறோம்.
அதற்கு பதில் அளித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர்” முதல் வழக்கில் 21 சாட்சி, 2வது வழக்கில் 100 சாட்சி, 3 வது வழக்கில் 200 சாட்சிகள் உள்ளனர். வாய்தா கேட்காவிட்டால் 3மாதங்களுக்குள் வழக்கை முடித்து விடலாம். இந்த வழக்கில் செந்தில் பாலாஜி ஜாமீன் கோர முடியாது. செந்தில் பாலாஜி வழக்கை தமிழ்நாடு அரசு தான் வேண்டுமென்றே இழுத்தடித்து வருகி்றது.
நீதிபதி: 3 மாதத்தில் வழக்கை முடிப்போம் என்று ED கூறுவதை ஏற்க முடியாது.
செந்தில் பாலாஜி 5 முறை எம்.எல்.ஏவாக உள்ளார். அவர் எங்கும் தப்பி ஓடமாட்டார். இவ்வாறு கூறிய நீதிபதிகள் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.