அதிமுக பொதுக்குழு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற நிலையில், இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓபிஎஸ் உள்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே ஈரோடு இடைத்தேர்தல் பணிகளில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
இடைத்தேர்தலில் உறுதியாக போட்டியிடுவோம் என்று தெரிவித்துள்ள ஓபிஎஸ், இரட்டை இலையும் தங்களுக்கே சொந்தம் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் அல்லது நிறுத்தப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் போல சின்னம் முடக்கப்பட்டு தனித் தனிச் சின்னம் வழங்கப்படுமா என்ற விவாதம் அரசியல் களத்தில் பலமாக எழுந்துள்ளது.
இந்நிலையில் மன்னார்குடியில் நிருபர்களை சந்தித்த சசிகலா….“அதிமுக தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ அதுதான் என்னுடைய முடிவாக இருக்கும். தொண்டர்களின் மனக்குமுறலை பார்த்துக்கொண்டிருக்கிறேன். இரட்டை இலை சின்னத்தை எதுவும் செய்ய விடமாட்டேன். இரட்டை இலையை எந்தக் காலத்திலும் யாராலும் எதுவும் செய்ய முடியாது. நான் உயிருடன் இருக்கும் வரை இரட்டை இலைக்கு ஆபத்து வர விடமாட்டேன். என் நிழலைக் கூட யாராலும் நெருங்க முடியாது” என்று கூறியுள்ளார். யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற கேள்விக்கு, “ஓபிஎஸ், இபிஎஸ் என இரண்டு பேரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளனர். அதில் என்ன தீர்ப்பு வருகிறது எனப் பார்ப்போம்” என்று பதிலளித்தார்.