Skip to content

அரசு நிதியில் நடத்தப்படும் சி.எஸ்.ஐ., கல்வி நிறுவனங்களில் மத அடிப்படையில் நியமனம் ஏன்? உயர் நீதிமன்றம் கேள்வி

திருநெல்வேலி சி.எஸ்.ஐ., மறைமாவட்டத்தால் நடத்தப்படும் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக பிஷப், ஒருதலைபட்சமாக எந்த முடிவையும் மேற்கொள்ள தடை விதிக்கக்கோரி மனோகர் தங்கராஜ் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு….. திருநெல்வேலி சி.எஸ்.ஐ., மறைமாவட்டத்தால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு ஹசீனா அல்லது ஹேமா ஆசிரியர்களாக நியமிக்கப்படுவரா என கேள்வி எழுகிறது. திருநெல்வேலி திருச்சபை திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவர்களின் சபை. இது ஒரு பதிவு செய்யப்படாத அமைப்பு. திருநெல்வேலி மறைமாவட்ட சொந்த விதிகளால் நிர்வகிக்கப்படுகிறது. மறைமாவட்டம் துவக்கப் பள்ளி முதல் கல்லுாரி வரை பல கல்வி நிறுவனங்களை நிறுவியுள்ளது. அவை சிறுபான்மை நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்களின் சம்பள செலவுகளை, அரசிடம் இருந்து மானியமாக பெறுகின்றனர். அரசிடமிருந்து மறைமாவட்டம் ஆண்டு மானியம் 600 கோடி ரூபாய். யு.ஜி.சி., நிதி அளிக்கிறது. மாநில அரசின் நிதி உதவி பெறுவதற்கான உரிமையுடன், சிறந்த, திறமையான ஆசிரியர்களை நியமிக்கும் கடமை உள்ளது. மறைமாவட்ட பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பது மறைமாவட்டக் கொள்கை எனில், அது நிச்சயமாக நல்ல நிர்வாகத்திற்கு உகந்ததாக இருக்காது. சந்தேகத்திற்கு இடமின்றி, சிறுபான்மை நிறுவன நிர்வாகம் பணி நியமனம் செய்யும். ஜாதி, மதம் மற்றும் மத பின்னணியை பொருட்படுத்தாமல் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கும் வகையில் காலியிடங்களை முறையாக அறிவிக்க வேண்டும். ஆட்சேர்ப்பு முறையை முன்னரே தீர்மானித்துவிட்டால், இவை அனைத்தும் வீணாகிவிடும். அதனால் தான் வெளிப்படைத்தன்மை வேண்டும். தேர்விற்கான விதிமுறைகளை நிர்வாகங்கள் தெளிவுபடுத்த வேண்டும். நேர்காணல் நடவடிக்கைகளை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டோர் எவ்வாறு தேர்வு நடந்தது என்பதை அறிய வழிவகை செய்ய வேண்டும். மறைமாவட்ட பதிவு மூப்பு பட்டியலிலிருந்து ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என, ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. சிஎஸ்ஐ கல்வி நிறுவனங்களில் நியமனத்தின் போது ஹசீனா மற்றும் ஹேமா கூட பரிசீலிக்கப்பட மாட்டார்கள். நியமனத்தின் முழு நடைமுறையும் அரசியலமைப்பிற்கு முரணானது; பாரபட்சமானது. ஒரு குறிப்பிட்ட மதப்பிரிவைச் சேர்ந்தவர் மட்டுமே பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர் என கூறுவது அரசியலமைப்பிற்கு எதிரானது. அரசின் கருவூலத்திலிருந்து சம்பளம் வழங்கப்படுகிறது. தகுதியுடைய அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் பணி வழங்க வேண்டும் என, மதச்சார்பின்மையின் அடிப்படைக் கோட்பாடுகள் கோருகின்றன. உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்களில் பணியாளர் நியமனத்தில் வெளிப்படைத் தன்மையை பின்பற்றுவதற்கான சட்டம் இயற்றுவதற்கான தருணம் வந்துவிட்டது. மனுதாரர் கோரும் நிவாரணம் அனுமதிக்கப்படுகிறது இவ்வாறு உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!