வேலூர் சிஎம்சி மருத்துவமனை ஏ-பிளாக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதி பிசியோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் தந்தை அழகிரி மற்றும் குடும்பத்தினர் உடனிருந்து கவனித்து வருகின்றனர். அவர் சிகிச்சை பெற்று வரும் தளம் காவல் துறையினரின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், சிஎம்சி மருத்துவமனை மெடிக்கல் சூப்ரெண்ட் அலுவலகத்துக்கு நேற்று வந்த ஒரு மெயிலில் துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது. இது குறித்து வேலூர் எஸ்பி (பொறுப்பு) கிரண் ஸ்ருதிக்கு புகார் அளிக்கப்பட்டது. இப்புகார் குறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.. துரை தயாநிதி சிகிச்சை பெற்று வரும் தளத்துக்கு 3 காவலர்கள் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக ஒரு எஸ்ஐ தலைமையில் 4 பேர் அடங்கிய போலீசார் மப்டியில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்கின்றனர்.