Skip to content
Home » இறந்த மகனை உட்கார வைத்தது ஏன்? ஜேம்ஸ் பள்ளி மீது தந்தை குற்றச்சாட்டு

இறந்த மகனை உட்கார வைத்தது ஏன்? ஜேம்ஸ் பள்ளி மீது தந்தை குற்றச்சாட்டு

  • by Senthil

திருச்சி   பழைய பால்பண்ணை அருகே உள்ள மகாலட்சுமி நகரை சேர்ந்தவர்  செல்லப்பா, புகைப்படக்கலைஞர். இவரது ஒரே மகன்  பிரதீப்(வயது7). திருச்சி    பாரதியார் சாலையில் உள்ள  செயின்ட் ஜேம்ஸ்  மெட்ரிக் பள்ளியில் 2ம்  வகுப்பு படித்து வந்தான்.  இந்த சிறுவனுக்கு 2019ம் ஆண்டு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில்   நலம் பெற்று  பள்ளிக்கு சென்று வந்தான்.

நேற்று முன்தினம் வழக்கம் போல பிரதீப் பள்ளிக்கு சென்றான்.  பிற்பகல் 2.55 மணிக்கு அவனது தந்தை  செல்லப்பாவுக்கு பள்ளியில் இருந்து போன் வந்தது. அதில் பேசியவர்கள் உங்கள் மகன் பிரதீப் பள்ளியில் மயங்கி விழுந்து விட்டான். அருகில் உள்ள ஆர்த்தி பள்ளியில் சேர்த்துள்ளோம்  உடனே வாருங்கள் என்று தகவல் சொல்லி இருக்கிறார்கள்.

அவர் உடனடியாக புறப்பட்டு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அப்போது மருத்துவமனை ஊழியர்கள், பிரதீப்பை மீண்டும் பள்ளிக்கே கொண்டு சென்று விட்டனர் என்று கூறியதால் பள்ளிக்கு வந்து பார்த்துள்ளார். அப்போது பள்ளியில் ஒரு நாற்காலியில்  உட்காரவைக்கப்பட்டிருந்தான். ஆனால் அவனது உடலில் உயிர் இல்லை.  மகன் இறந்ததை அறிந்த  செல்லப்பாவும், அவரது மனைவியும் கதறி துடித்தனர்.

மகன் எப்படி இறந்தான்,. அவனுக்கு என்ன நேர்ந்தது என  அவர் ஆசிரியர்களிடம் கேட்டு உள்ளார். அப்போது பள்ளி நிர்வாகம் தரப்பில் மாணவன்  வகுப்பில் இருந்தபோது  திடீரென மயங்கி  பின்பக்கமாக  விழுந்துவிட்டான். ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். அங்கு இறந்து விட்டதாக கூறிவிட்டனர் என  விளக்கம் அளித்தனர்.

மாணவன் இறந்தபோது அந்த வகுப்பில் ஆசிரியர் இல்லை. மாணவர்கள்  அங்கும், இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர்.  பிரதீப் விழுந்ததைக்கூடடி பெரும்பாலான மாணவர்கள் பொருட்படுத்தாமல் விளையாடிய நிலையில் காணப்பட்டனர்.(இது தொடர்பான கண்காணிப்பு  காமிரா  புட்டேஜ்களையும் காட்டி உள்ளனர்)

இது பற்றி  இறந்து போன மாணவனின் தந்தை செல்லப்பா கண்ணீர் மல்க கூறியதாவது:

என் மகன் இருதய நோயாளிதான். அவன் மயங்கி விழுந்தபோது ஆசிரியர் இருந்திருந்தால், அவனுக்கு முதலுதவி அளித்திருக்கலாம். உடனடியாக அவனை தூக்கி  முதலுதவி செய்திருந்தால் ஒருவேளை அவனுக்கு மரணம் நிகழ்ந்திருக்காது என்று தான்  நான் நினைக்கிறேன்.  பள்ளி நேரத்தில் ஆசிரியர் இல்லாமல் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர்.

ஒரு  9 ம் வகுப்பு மாணவியை அந்த வகுப்பை பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு ஆசிரியர் போய்விட்டார். ஆனால் என் மகன் விழுந்து கிடந்த நிலையில் அந்த மாணவிக்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை. இந்த குறைபாடுகள் இல்லாதிருந்தால் என் மகன் உயிர் அநியாயமாக பறி போய் இருக்காது.

ஆனாலும் என் மகன் பிழைத்து விடமாட்டானா என நான் மீண்டும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றேன். ஆனால் அவன்  இறந்து வெகுநேரம் ஆகிவிட்டது என டாக்டர் சொல்லிவிட்டார்.  என் மகன் இனி பிழைத்து  மீண்டு வரமாட்டான். ஆனால் பள்ளியை நம்பி அனுப்பும் பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் என்ன சொல்லப்போகிறது.

அத்தனை குழந்தைகளுக்கும் பள்ளி நிர்வாகம் தானே பொறுப்பு. ஒரு ஆசிரியர் வகுப்பில் இருந்திருந்தால்  என் மகன் உயிர் போயிருக்காது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இதுபோன்ற நிலைமை இனி ஏற்படக்கூடாது. அத்துடன் என் மகன்  வெளியில் இருந்து வகுப்புக்குள் வந்து உட்கார்ந்ததும் சாய்ந்து விழுவது போன்ற  சிசிடிவி காட்சிகளை காட்டினார்கள். வகுப்புக்கு வெளியே  அவனுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. 3 மாதத்திற்கு முன்  அவனுக்கு  எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்தோம். எந்த பிரச்னையும் இல்லை என்று தான் சொன்னார்கள்.  இறந்த பின்னரும் ஏன் என் மகன் சடலத்தை நாற்காலியில் உட்கார வைத்தனர்? இதற்கு பள்ளி நிர்வாகம் பதில் சொல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கண்ணீருடன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!