மேற்கு வங்க கவர்னராக இருந்த ஜெகதீப் தன்கர், தற்போது துணை ஜனாதிபதியாக,மாநிலங்களவை தலைவராக இருக்கிறார். கவர்னராக இருந்தபோது அவர் மேற்கு வங்க அரசுக்கு நாளும் தலைவலியாக இருந்தார் என அந்த கட்சியினர் புகார் கூறி வந்தனர். தற்போது மாநிலங்களவையில், எதிர்க்கட்சிகள் காரசாரமான பேச்சுக்களால் ஜெகதீப் தன்கர் டென்ஷனாகி வருகிறார்.
மாநிலங்களவையில் இன்று பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன.
அப்போது பேசிய ஜகதீப் தன்கர் , (எதிர்க்கட்சியினர்) உங்கள் இதயங்களில் மட்டும் ரத்தம் கொட்டுவதாக நினைக்கிறீர்கள்… அந்த பெண்ணால் ஒட்டுமொத்த தேசமும் வேதனையில் உள்ளது. எல்லோரும் அந்த சூழ்நிலையை பகிர்ந்து கொள்கிறார்கள், ஆனால் அதை பணமாக்க, அரசியலாக்குகிறார்கள். அது அந்த பெண்ணுக்கு ஏற்படும் மிகப்பெரிய அவமரியாதையாகும் என கூறினார்.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் அவைத்தலைவரை நோக்கி ஆவேசமாக பேசினார். இதனால் கோபமடைந்த ஜெகதீப் தன்கர் அவையில் இருந்து வெளியேறினார்.
இதைத்தொடர்ந்து, பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து வினேஷ் போகட் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.