பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த பைனலில், தங்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீராங்கனை வினேஷ் போகத், அனுமதிக்கப்பட்ட எடையை காட்டிலும் 100 கிராம் அதிகமாக இருந்ததால் நேற்று தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவரது தகுதி நீக்கத்தை எதிர்த்து இந்திய ஒலிம்பிக் கமிட்டி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. எனினும் வினேஷ்க்கான வாய்ப்புகள் முடிந்து விட்டதாகவே சர்வதேச மல்யுத்த சங்கம் அறிவித்து விட்டது. இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 08) மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் தெரிவித்தார். அவர் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,” எனக்கு எதிரான போட்டியில் மல்யுத்தம் வென்று விட்டது. நான் தோற்றுப் போய் விட்டேன். என் தைரியம் முற்றிலும் நொறுங்கி விட்டது. இனி என்னிடம் போராட சக்தி இல்லை. இனியும் போட்டிகளில் விளையாட எந்த வலிமையும் இல்லை” என்று கூறியுள்ளார்.