கரூர்:07.08.2024
கரூர் அருகே பஞ்சாயத்து தார் சாலையில் முள்ளை வெட்டிப் போட்டு பாதையை மறைத்ததால் கடந்த 4 மாதமாக வீட்டை விட்டு வெளியேறாத முதியவர்கள் – வழக்கறிஞரான மகனின் சட்டப் போராட்டத்தால் சாலையில் இருந்த முட்கள் அகற்றப்பட்டு வழி ஏற்படுத்திக் கொடுத்த அதிகாரிகள்.
கரூர் மாவட்டம் வாங்கல், கருப்பம்பாளையத்தை அடுத்துள்ளது கிராயூர். இந்த கிராமத்தை சுற்றி விவசாய நிலங்களாக இருப்பதால் தோட்டத்தில் சின்னசாமி என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். விவசாய வேலை செய்து கொண்டு அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் அவரது மனைவி,
மகனுடன் வாழ்ந்து வருகிறார். கருப்பம்பாளையம் முதல் கிராயூர் மந்தை வரை புறம்போக்கு நிலத்தில் வாங்கல் பஞ்சாயத்து சார்பில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதே கிராமத்தை சார்ந்த மூர்த்தி, பெரியசாமி உள்ளிட்ட 5 பேருக்கு சின்னசாமியின் தோட்டத்தை தாண்டி விவசாய நிலங்கள் உள்ளது. அந்த விவசாய நிலத்திற்கு செல்ல மாற்றுப் பாதை இருந்தாலும், இவர்கள் குறுக்கு வழியாக செல்ல சின்னசாமியின் தோட்டத்து வழியாக சென்று வந்துள்ளனர். அதற்கு சின்னசாமி குடும்பத்தினர் எந்த ஆட்சேபனையும் சொல்லவில்லை. இந்நிலையில் கிராயூர் மந்தை முதல் அவர்களது தோட்டம் வரை செல்ல தார் சாலை அமைக்க 50 செண்ட் நிலம் சின்னசாமியிடம் கேட்டுள்ளனர்.
அதற்கு சின்னசாமி தர மறுத்ததால் பஞ்சாயத்து தார் சாலையில் முட்களை வெட்டிப் போட்டு போக்குவரத்திற்கு தடையை கடந்த ஏப்ரல் மாதம் 3ம் தேதி ஏற்படுத்தியுள்ளனர். இதனை அறிந்த சின்னசாமி கேட்க முற்பட்ட போது, சாலை போட இடம் தரவில்லை என்றால் இப்படி தான் செய்வோம் என கூறியதுடன், அவரை அரிவாளை காட்டி மிரட்டி அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக அவரது மகன் அஞ்சித் குமாரிடம் செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். அவர் வந்து கேட்டதற்கு ஆபாச வார்த்தைகளால் திட்டியும், அரிவாளை காட்டி மிரட்டி துரத்தியுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பித்த அஞ்சித் குமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், ஆய்வாளர் ஆகியோரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து வழக்கறிஞரான அஞ்சித் குமார் சென்னை உயர்நீதிமன்ற நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து முட்களை அகற்ற வேண்டும் என ஆனால், மண்மங்களம் வட்டாட்சியர், கரூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு உத்தரவினை பிறப்பித்தார். ஆனால், எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. இடையில் நாடாளுமன்ற தேர்தல் வந்ததால் சின்னசாமியும் அவரது மனைவியும் வாக்களிக்க செல்ல முடியாத சூழ்நிலை இருப்பதால் முட்களை அகற்ற வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கும் புகார் அளித்தனர். எந்த நடவடிக்கையும் இல்லை. இதற்கிடையில் அஞ்சித் குமார் மற்றும் அவரது பெற்றோரை அரிவாளால் தாக்க வந்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் மூலம் வாங்கல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனக் கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று கிராயூர் கிராமத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பொக்ளின் இயந்திரம் மூலம் முட்களை அகற்றினர். இதனால் கடந்த 4 மாதங்களாக வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில் இருந்த முதியவர்களுக்கு ஒரு விடிவு காலம் பிறந்துள்ளது.
இது தொடர்பாக பானுமதி செய்தியாளர்களிடம் பேசிய போது, கடந்த 4 மாத காலமாக சிறை வாழ்க்கை வாழ்ந்ததாகவும், உடம்பு சரியில்லாமல் இருக்கும் தனது கணவருக்கு கூட எனது மகன் இரவு நேரத்தில் முட்புதரிலும், 10 அடி ஆழமுள்ள வாய்க்காலை கடந்து வந்து மருந்துகளை கொடுத்துச் செல்லும் நிலை இருந்ததாகவும், வாங்கல் குப்புச்சிபாளையம் பஞ்சாயத்து தலைவர் தான் காரணம் என்று குற்றம் சாட்டினர்.