ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர படுத்தப்பட வேண்டும் என்ற பாரதிய மஸ்தூர் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறையின் ஒப்பந்த தொழிலாளர்களுக்கான ஆலோசனை வாரியத்தின் தலைவர் திரு.சுரேந்திர குமார் பாண்டே , இன்று திருச்சி இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எல்பிஜி ஆலையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கான நலன்கள் மற்றும் நடைமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார். ஆய்வில் பல குறைகளை கண்டறிந்து அதற்கான விளக்கத்தை நிர்வாகத்திடம் கேட்டார் . மேலும் ஆலையில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மத்தியில் நேரடியாக கலந்தாய்வு செய்து அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தார்.
அவர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிறுவனத்தின் தென்பிராந்திய மனித வள மற்றும் ஆலையின் அதிகாரிகள் மற்றும் பாரதிய மஸ்தூர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பாரதிய மஸ்தூர் சங்கம் ஒப்பந்த தொழிலாளர்களை சீனியாரிட்டி முறையில் படிப்படியாக நிரந்தர படுத்தபட வேண்டும் என்றும், அவர்களுக்கு ஊதிய உயர்வு வேறுபாடுகள் களையப்பட வேண்டும் என்றும் மேலும் அவர்களுக்கு இருக்கக்கூடிய
பல குறைகளை அவரிடம் எடுத்துரைத்து வேண்டுகோள் விடுத்தது. விரைவில் தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும் இத்தனை ஆண்டு காலமாக அங்கு பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்காக எந்த ஒரு சங்கமும் முன்னெடுக்காத முக்கியமான கோரிக்கைகளை பாரதிய மஸ்தூர் சங்கம் முன்னெடுத்து இருப்பதற்காக பாராட்டுகளை தெரிவித்தார். இந்நிகழ்வில் ஒப்பந்த தொழிலாளிகள் சார்பாக அகில இந்திய பி எம் எஸ் செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ் மாநில பொதுச்செயலாளர் சங்கர் மற்றும் மத்திய நிர்வாகிகள் கே. வி.ராதாகிருஷ்ணன், சச்சின் மங்கேலா, மாநில நிர்வாகிகள் மணிவண்ணன், கணேசன். மற்றும் பாரதிய மாஸ்தூர் சங்கம் திருச்சிராப்பள்ளி மாவட்ட தலைவர் திரு திவாகர் ஆகியோர் உடன் இருந்தனர்.