தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில், கொள்ளிடக் கரையை ஒட்டியுள்ள கிராமங்கள் கோவிந்த நாட்டுச் சேரி ஊராட்சியைச் சேர்ந்த பட்டுக்குடி, கூடலூர், புத்தூர். கொள்ளிடத்தில் வினாடிக்கு 1 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டதால், பட்டுக்குடி காளியம்மன் கோயில் தெருவில் உள்ள ஈமக்கிரியை மண்டபம், பிள்ளையார் கோயில் ஆகிய இடங்கள் வெள்ளத்தில் நீரில் முழ்கின.
கொள்ளிடத்தில் செல்லும் அதிகப் படியான வெள்ளத்தால் அந்த பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட காய்கறிப் பயிர்களான மிளகாய், வாழை, முருங்கை பாதிக்கப்பட்டுள்ளது.கொள்ளிடக் கரையில் இயங்கி வந்த நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகள் இந்த வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளன. இதனால் லட்சக் கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை துணை ஆட்சியர் முத்து கிருஷ்ணன் பட்டுக் குடி, கூடலூரில் கொள்ளிடம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டார். வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் மக்கள் தங்கக் ஏற்படுத்தியிருந்த சமுதாயக் கூடத்தையும் பார்வையிட்டார். செங்கல் சூளையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களை பாதுகாப்பான இடங்க ளுக்குச் செல்ல அறிவுறுத்தினார். ஆய்வின் போது ஊராட்சித் தலைவர் ஜெய் சங்கரும் உடனிருந்தார்.
கொள்ளிடத்தில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளம் குறித்து விவசாயிகள் கூறுகையில் வடிகாலான தூரியாறு பாதியளவு தான் தூர் வாரப் பட்டுள்ளது. பருவ மழை தொடங்கும் முன்னர் முழுமையாக தூர் வாரப் பட வேண்டும். இந்த ஊராட்சியில் செல்லும் 5 கிலோ மீட்டர் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள், நடந்துச் செல்லும் முதியவர்கள், குழந்தைகள் சிரமப் படுகின்றனர்.
சாலையின் இரு புறமும் குடியிருப்புகள் இருப்பதால், வாகனத்தில் செல்பவர்கள் சற்று தடுமாறினால் கூட கீழே விழ நேரிடும். இதனால் எம்.பி, எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலாவது இந்தச் சாலையைப் சீர் செய்ய வேண்டும் என்றனர்.