Skip to content
Home » டி.என்.பி.எல். இறுதிப்போட்டி.. கோவையை வீழ்த்தி திண்டுக்கல் சாம்பியன்…

டி.என்.பி.எல். இறுதிப்போட்டி.. கோவையை வீழ்த்தி திண்டுக்கல் சாம்பியன்…

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணி மற்றும் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் நேற்று இரவு மோதின. இந்த போட்டி சென்னை – சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த லைகா கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்காக ராம் அரவிந்த் 27 ரன்கள், ஆதிக் ரஹ்மான் 25 ரன்கள், சுஜய் 22 ரன்கள் எடுத்து இருந்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களில் சந்தீப் வாரியர், வருண் சக்கரவர்த்தி, விக்னேஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அஸ்வின் 4 ஓவர்கள் வீசி 13 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கை விரட்டிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சோபிக்க தவறினர். ஷிவம் சிங் 4 மற்றும் விமல் குமார் 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் அஸ்வின் மற்றும் பாபா இந்திரஜித் இணைந்து 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பாபா இந்திரஜித் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். அஸ்வின் 52 ரன்கள் எடுத்தார். சரத்குமார், 15 பந்துகளில் 27 ரன்கள் விளாசினார். 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது திண்டுக்கல் டிராகன்ஸ் அணி. அதன் மூலம் டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஆட்ட நாயகன் விருதை அஸ்வின் வென்றார்.

பட்டம் வென்றுள்ள திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு கோப்பையுடன் ரூ.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 2-வது இடம் பிடித்துள்ள கோவை அணி ரூ.30 லட்சம் பெற்றுள்ளது. ஷிவம் சிங், ஆரஞ்சு கேப் வென்றார். அவர் இந்த சீசனில் 364 ரன்கள் எடுத்திருந்தார். 16 விக்கெட்டுகளை வீழ்த்திய பொய்யாமொழி பர்பிள் கேப் வென்றார். தொடர் நாயகன் விருதை ஷாருக்கான் வென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *