அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சி பேருந்துநிலையம் அண்ணாசிலை அருகில், ஆகஸ்ட்-3, 2024 இந்திய உடல் உறுப்பு தான தினத்தினை முன்னிட்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு உறுப்பு மாற்றும் ஆணையம் சார்பில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இப்பேரணியானது அரியலூர் நகராட்சி பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகில் தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாக சென்று அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் முடிவடைந்தது. பேரணியில் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரியை சேர்ந்த சுமார் 300 மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர். மேலும்
பேரணியில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகள் உறுப்புதானம் செய்வோம் உயிர்களை காப்போம், DONATE ORGANS SAVE LIVES என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய டி-சர்ட்டுகளை அணிந்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
முன்னதாக இந்திய உறுப்புதான தினத்தினை முன்னிட்டு உறுப்பு தானம் செய்ய விரும்புபவர்கள் பதில் குறியீடு (QR Code) மற்றும் https://notto.abdm.gov.in என்ற Link –ஐ பயன்படுத்தி உறுப்பு தானம் அளிக்க விரும்புபவர்கள் மற்றும் திசுக்கள் பற்றிய விபரங்களையும் உள்ளீடு செய்து பதிவு செய்து கொள்ளும் பதில் குறியீட்டினை (QR Code) வெளியிட்டு, தேசிய உறுப்பு தான நாள் உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வாசிக்க அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
மேலும், உடல் உறுப்பு தான நாளினை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றிப்பெற்ற அரசு மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கோப்பை மற்றும் பாராட்டுச்சான்றிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி வழங்கினார்.
இப்பேரணியில் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.முத்துக்கிருஷ்ணன், குடிமை மருத்துவ அலுவலர் மரு.கொளஞ்சிநாதன், அரசு மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.