அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி நேருக்கு நேர் மோத உள்ளன. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் (81) களமிறங்கியுள்ளார். அதேபோல், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (78) களமிறங்கியுள்ளார். ஆனால், வயது முதிர்வு, டிரம்புடனான விவாதத்தின்போது திணறல், உள்ளிட்ட சர்ச்சைகளால் கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. கட்சியினரின் அதிருப்தி அதிகரித்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுத்த ஜோ பைடன், அதற்கான அறிவிப்பையும் கடந்த 21-ம் தேதி வெளியிட்டார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் இருந்து தற்போதைய அதிபர் ஜோ பைடன் விலகிய நிலையில், வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக போட்டியிடுவதற்கு தேவையான ஆதரவை, அதற்கான வாக்குப்பதிவு தொடங்கிய 2-வது நாளிலேயே கட்சி நிர்வாகிகளிடம் இருந்து கமலா ஹாரிஸ் பெற்றார். 5 நாட்கள் நடக்கும் வாக்குப்பதிவில் 4,000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வாக்களித்தனர். அதில் சுமார் 2,370 க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வாகியுள்ளார். இதனை அக்கட்சியின் தேசியக் குழு தலைவர் ஜேம் ஹாரிசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கட்சித் தலைமை தன்னை அதிபர் வேட்பாளராக அறிவித்தது பெருமை அளிப்பதாக கூறியுள்ள கமலா ஹாரிஸ், அடுத்தவாரம் பரப்புரையை தொடங்க இருப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.