அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படங்களில் மிகவும் முக்கியமான படம் என்றால் அது விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தைக் கூறலாம். இந்த படத்தினைப் பார்த்த திரைப் பிரபலங்கள் பலர் நல்ல விமர்சனங்களையே கொடுத்தனர். மகாராஜா படத்தை, குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இயக்கினார். பலராலும் பாராட்டப்பட்ட இந்த படத்தின் இயக்குநர் நித்திலன் சாமிநாதனை தனது இல்லத்திற்கு அழைத்து பாராட்டியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகாராஜா படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ளனர். இதில், அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ், முனிஸ் காந்த், சிங்கம்புலி, பாரதிராஜா, வினோத் சாகர், ஏ.எல் தேனப்பன்,அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் கதை, திரைக்கதை, எடிட்டிங் மற்றும் நடிப்பு என அனைத்து விதமான அம்சங்களும் பாராட்டப்பட்டது.
மகாராஜா படம் விமர்சன ரீதியாக மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றது. இதனால் படத்தில் நடித்த விஜய் சேதுபதி உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகள் கிடைத்தது. அதேபோல் படத்தின் இயக்குநரான நித்திலன் சுவாமிநாதனை பலரும் பாராட்டினர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் சரவதேச இந்தியத் திரைப்பட விழாவில் மகாராஜா படம் திரையிடப்பட்டது. ஜூன் 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதிவரை நடைபெற்ற திரைப்பட விழாவில் மகாராஜா திரைப்படம் நிறைவு நாளான 30ஆம் தேதி இரவு 8 மணிக்கு திரையிடப்பட்டது.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகாராஜா படத்தின் இயக்குநரான நித்திலன் சாமிநாதனை தனது இல்லத்திற்கு அழைத்து அவரைப் பாராட்டியுள்ளார். இந்த சந்திப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன். மேலும் அந்த பதிவில், ” அன்பிற்குரிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார், இந்த சந்திப்புக்காக நான் உங்களுக்கு நன்றி கூறிக்கொள்கின்றேன். இந்த சந்திப்பில் உங்கள் அனுபவங்களை நீங்கள் உங்கள் பொற்கரங்களால் எழுதிய நாவலைப் படிப்பதைப் போல் இருந்தது. அதில் இருந்து வாழ்க்கை, வாழ்க்கையை புரிந்து கொள்வது, இந்த தமிழ் சினிமா உலகிலான உங்கள் வாழ்க்கை அனுபவத்தை தெரிந்து கொண்டேன். உங்களுடைய பணிவும் விருந்தோம்பலும் என்னை மிகவும் வியக்கவைத்தது. மகாராஜா படம் உங்களுக்கு எந்த அளவுக்கு பிடித்துப் போனதை நினைக்கும்போது மனதுக்கு நிறைவாக உள்ளது. மீண்டும் ஒரு நன்றி. தலைவர் வாழ்க” என குறிப்பிட்டுள்ளார்.