கர்நாடகாவில் பெய்த கனமழையின் காரணமாக காவிரி ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு அதிக அளவில் தண்ணீர் வந்தது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் வரும் தண்ணீர் முழுவதும் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. வெளியேற்றப்பட்ட நீர் முக்கொம்பு மற்றும் கல்லணை ஆகிய இரு அணைகளிலும் தேக்கப்பட்டு அதிக அளவிலான நீர் கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்பட்டுள்ளது.
வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடிக்கு அதிகமான தண்ணீர் கொள்ளிட ம் ஆற்றில் செல்கிறது. தற்போது
அரியலூர் – தஞ்சாவூர் இடையே உள்ள அணைக்கரை கீழணைக்கு வினாடிக்கு 81ஆயிரத்து 564 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. இதில் வடவார் தலைப்பு வாய்க்காலில் 2202 கன அடி நீர் திறக்கப்பட்டு வாய்க்கால்கள் மூலம்
வீராணம் ஏரிக்கு அனுப்பப்படுகிறது. வீராணம் ஏரி மூலம் சென்னைக்கு குடிநீர் செல்கின்றது. அணைக்கரை
கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் 75 மதகுகள் மூலம் 79 ஆயிரத்து 49 கனஅடி நீர் கடலுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
அணையின் கொள்ளளவான 9 அடியில் தற்போது 8 அடி நீர் நிரம்பியுள்ளது. அதிகப்படியான தண்ணீர் வரத்து இருந்தால் முழு அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வீணாக கடலில் கலக்கப்படும் என்பதால் விவசாயிகளும் பொதுமக்களும் வேதனை அடைந்துள்ளனர்.