புதுடெல்லி: “பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை” என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
பட்டியலினத்தில் மிகவும் பின்தங்கியோருக்கு உள்ஒதுக்கீடு வழங்க பஞ்சாப் அரசு சட்டம் கொண்டுவந்தது. அரசு வேலைவாய்ப்புகளில் பட்டியலின பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் வால்மீகி மற்றும் மழாபி சீக்கிய சமூகத்தினருக்கு 50% உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் விதமாக பஞ்சாப் மாநில அரசு சட்டம் கொண்டு வந்தது.
இந்நிலையில் பஞ்சாப் அரசின் வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட 6 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பு வழங்கினர். அதேநேரம், ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.
அதன்படி, 6 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், “பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை. பட்டியலினத்தில் மிகவும் பின்தங்கியோருக்கு உள்ஒதுக்கீடு வழங்க பஞ்சாப் அரசு கொண்டுவந்த சட்டம் செல்லும். அரசியல் சாசன சட்டத்தின் 14வது பிரிவை உள் ஒதுக்கீடு மீறவில்லை. பட்டியலின உட்பிரிவுகள் எதுவும் பட்டியலின வகுப்பினர் என்ற வரையறையில் இருந்து விலக்கப்படாத காரணத்தால் உள்ஒதுக்கீடு வழங்கலாம்.
எனினும், மாநிலங்கள் அதன் சொந்த விருப்பம் அல்லது அரசியல் தேவைக்காக செயல்பட முடியாது. மாநிலங்களின் முடிவு நீதித்துறை மறுஆய்வுக்கு ஏற்றது.
பட்டியலின, பழங்குடியினருக்கான உள்ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும். உள் இடஒதுக்கீடு தொடர்பான மாநில அரசுகள் கொண்டுவந்த சட்டம் செல்லும்.” என்று ஒருமித்த தீர்ப்பளித்தனர்.
அதேநேரம், ஆந்திராவை சேர்ந்த இவி சின்னையா என்பவர், “மாநில அரசுகள் உள்ஒதுக்கீடு கொடுக்கக்கூடாது. மாநில அரசுகளுக்கு உள்ஒதுக்கீடு வழங்க அதிகாரம் இல்லை” என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, “உள்ஓதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை” என்று 2005-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இந்நிலையில், இன்றைய தீர்ப்பில் உச்ச நீதிமன்றத்தின் 2005-ம் ஆண்டு தீர்ப்பையும் தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு ரத்து செய்தது. முன்னதாக, இன்று நீதிபதி பேலா திரிவேதி மட்டும் இந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார்.