ஈரான் அதிபர் மசூத் பெஜஷ்கியான் பதவியேற்பு நிகழ்ச்சி கடந்த செவ்வாய் கிழமை காலையில் நடந்தது. இதில், ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பின் அவர் , ஈரான் தலைவர் அயோதுல்லா அலி கோமேனியை சந்தித்து பேசினார்.அதன்பின்னர், ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் இருந்தபோது படுகொலை செய்யப்பட்டார். இது ஈரானை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்நிலையில், ஈரான் தலைவர் அயோதுல்லா அலி கோமேனி, இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை நடத்தும்படி தன்னுடைய படைகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.
முன்னதாக நேற்று காலை அவர் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் நடத்தினார். இதில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. இதுபற்றி ஈரான் அதிகாரிகள் கூறும்போது, ஈரான் அரசு எந்தளவுக்கு வலிமையுடன் பதிலடி கொடுக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை. டெல் அவிவ் மற்றும் ஹைபா நகரங்கள் மீது ஆளில்லா விமானங்கள் மற்றும் ராக்கெட்டுகளை கொண்டு ஈரான் ராணுவ தளபதிகள் கூட்டான தாக்குதலை நடத்த கூடும் என பார்க்கப்படுகிறது. ஆனால், குடிமக்கள் மீது தாக்குதல் நடத்தாமல் பார்த்துக்கொள்வோம் என்றார்.