இந்தியாவின் மிகக் கடுமையான தேர்வுமுறையாகக் கருதப்படும் யு.பி.எஸ்.சி தேர்வையே போலியான பல ஆவணங்களை உருவாக்கி வளைத்து உள்ளே நுழைந்து ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆகிவிட முடியும் என்று காட்டிய மராட்டியத்தை சேர்ந்த பூஜா கட்கர் இன்று ஐஏஎஸ் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இவருக்கு வழங்கப்பட்ட ஐஏஎஸ் ரத்து செய்யப்பட்டது. மத்திய அரச இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பூனாவில் பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்த பூஜா கட்கர் தனக்கு சொந்தமான சொகுசு ஆடி காரில் சைரன் பொருத்தி வலம் வந்தார். தனக்கு தனி அலுவலகமும் பணியாளர்களும் வேண்டும் என்று கலெக்டரிடம் சண்டை போட்டு அட்டகாசம் செய்தார். துணை கலெக்டரின் அலுவலகத்தை ஆக்கிரமித்து தன் அலுவலகமாக மாற்றிக்கொண்டார். அதன் பிறகு தான் இவரது ஐஏஎஸ் பதவி மீது சக அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு துருவி துருவி விசாரிக்க தொடங்கினர். இவர் மாற்றுத்திறனாளி கோட்டாவில் உள்ளே நுழைந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இவர் குறிப்பிட்ட எந்த பிரிவு மாற்றுத்திறனாளியும் இல்லை என்பது தெரியவந்தது.
எனவே அவர் இன்று டிஸ்மிஸ் செய்யப்பட்டார். ஐஏஎஸ் பதவியும் ரத்து செய்யப்பட்டது. இனி வருங்காலத்தில் அவர் ஐஏஎஸ் எழுதவும் தடை விதிக்கப்பட்டது.