கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட 3 பெரும் நிலச்சரிவுகளால் சூரல்மலை, மேப்பாடி, முண்டக்கை ஆகிய 3 கிராமங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவில் தற்போது வரை 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள், கேரள மக்கள், குழந்தைகள் என 3069 பேர் மீட்கப்பட்டு 45 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து மீட்புப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது. எங்கு பார்த்தாலும் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. சூரல்மலை கிராமமே மண்ணில் புதிந்து போயுள்ளது. தோண்ட தோண்ட மனித உடல்களாக கண்டெடுக்கப்பட்டு வருவதோறு.. ஆற்று வெள்ளத்தில் பல கிலொமீட்டர் தொலைவிற்கு உடல்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு உருகுலைந்து போயுள்ளன.
இந்நிலையில் மீட்பு பணிகளை பார்வையிடுவதற்காக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீஜா ஜார்ஜ் வயநாட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவர் சென்ற கார் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பம் மீது மோதியது. இதில் அமைச்சர் வீணா ஜார்ஜுக்கு தலை மற்றும் கைகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதனையடுத்து அவர் மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.