மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் நேற்று (திங்கள்கிழமை) பேசியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், “நாட்டின் அரசியலமைப்பு அதிகாரம் கொண்ட தலைவர்கள் மற்றும் தனி நபர்கள் மீது அவநம்பிக்கையை, துவேஷத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு நேற்று ராகுல் காந்தி பேசி இருக்கிறார். இண்டியா கூட்டணிக்கு தேசிய சிந்தனை இல்லை. பகுத்தறிவற்ற கருத்துகள் மற்றும் கோரிக்கைகளை மட்டுமே அவர்கள் முன்வைக்கிறார்கள். மக்களுக்கு வழங்க நேர்மறையான நிகழ்ச்சி நிரல் எதுவும் அவர்களிடம் இல்லை. ராகுல் காந்தி தனது உரையின்போது குறிப்பிட்ட அனைத்து விஷயங்களும் ஆதாரமற்றவை. 2014-ல் மோடி அரசு பொறுப்பேற்றபோது நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்தது என்பதை அனைவரும் அறிவார்கள். ‘ஆதாரமற்ற கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டாம், சபையின் கண்ணியத்தைக் காக்க வேண்டும்’ என்று மக்களவை சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவரிடம் பலமுறை கூறி இருப்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். ராகுல் காந்தியின் பேச்சு, எதிர்க்கட்சிகளிடம் சிந்தனை வறட்சி இருப்பதையே காட்டுகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்துக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. எனினும், அது நடைமுறைப்படுத்தவில்லை” என தெரிவித்தார்.
ராகுல் காந்தியும் அவரது தாயாரும் ரிமோட் கன்ட்ரோல் மூலம் 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி செய்திருக்கிறார்கள். மசோதாவை கிழித்தெறிந்தவர் ராகுல் காந்தி. அப்போது ஏன் அவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை? தற்போது ஏன் நாடகம் நடத்துகிறார்கள்? மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிராகரித்தவர்கள் யார்? கடந்த 60 ஆண்டுகளாக செய்த ஊழல் மற்றும் மோசடிகளை மறைக்கவும், அவரை மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காகவும் ராகுல் காந்தி இப்படியெல்லாம் பேசுகிறார்” என தெரிவித்தார்.