கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட 3 இடங்களில் இன்று அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிகளுக்காக கண்ணூரிலிருந்து ராணுவம் வரவழைக்கப்பட்டது.நிலச்சரிவில் சிக்கி காயம் அடைந்த 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே அங்கு வயநாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் சிக்கியுள்ளனர். இந்த மோசமான சம்பவத்தில் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
நிலச்சரிவில் மேலும் பலர் சிக்கியிருப்பதாகக் கூறப்படும் நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இருப்பினும், மீட்புப் பணிகளில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. நிலச்சரிவு ஏற்பட்ட சூரல் மாலா நகரில் இருந்த பாலம் இடிந்துள்ளது. முண்டக்காய் பகுதியில் உள்ள நிலச்சரிவு ஏற்பட்ட அட்டமலைக்கு செல்லும் ஒரே பாதையாக இந்த பாலம் இருந்தது.
இப்போது நிலச்சரிவு காரணமாக இந்த பாலம் மொத்தமாக இடிந்து விழுந்ததால் மீட்புப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செய்தியாளர்கள், பொதுமக்கள் மட்டுமின்றி மீட்புப் படையினரும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்குச் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பாலம் இடிந்துள்ளதால் தற்போது ஹெலிகாப்டர் மூலமாக மட்டுமே பாதிக்கப்பட்ட இடத்திற்குச் செல்லும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கேரள நிலச்சரிவு குறித்த தகவல் அறிந்ததும், பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் கேரள முதல்வருடன் தொடர்பு கொண்டு தேவையான உதவிகள் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.