தனுஷ் படத்தை இனி தயாரிப்போர் அவரை ஒப்பந்தம் செய்வதற்கு முன் TFPC ஐ கலந்தாலோசிக்க வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்றைய காலகட்டத்தில் ஒரு சில நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஏற்கனவே அட்வான்ஸ் பெற்ற தயாரிப்பு நிறுவனத்தின் திரைப்படங்களில் பணிபுரியாமல், புதியதாக வரும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சென்று விடுகிறார்கள். இதனால், ஏற்கனவே அட்வான்ஸ் கொடுத்துள்ள தயாரிப்பாளர்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஆகையால், இனிவரும் காலங்களில் எந்த ஒரு நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளரிடம் அட்வான்ஸ் பெற்றிருந்தால் அந்த திரைப்படத்தினை முடித்துக் கொடுத்துவிட்டு, அடுத்த திரைப்படங்களின் பணிகளுக்கு செல்ல வேண்டும் என்று இக்கூட்டத்தில் பேசி முடிக்கப்பட்டது.
நடிகர் திரு.தனுஷ் அவர்கள் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றிருக்கும் சூழ்நிலையில், இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்கள், நடிகர் திரு.தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களின் பணிகளை துவங்குவதற்கு முன்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினை கலந்தாலோசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ள படுகிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.