பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:
‘கோவையில் மருத்துவர் பழனிவேல் அவர்களின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி மற்றும் கட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்ள வந்துள்ளேன்.
மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், குறைக்க வேண்டும் இல்லையேல், தமிழகத்தில் தொழில் செய்ய முடியாத சூழல் உருவாகும். மேலும் திமுக தேர்தல் வாக்குறுதியின்படி, ஆட்சிக்கு வந்ததும் மாதம் தோறும் மின் கட்டண கணக்கெடுப்பு என தெரிவித்தனர். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். மற்ற மாநிலங்களில் இதை செய்யும்போது ஏன் இங்கு முடியவில்லை. அப்படி எடுத்தால் 15 முதல் 18 விழுக்காடு மின்கட்டணம் குறையும். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு செலவை குறைக்கும்.
காவிரியில் நீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை நிரம்பி வருகிறது. இப்போது வினாடிக்கு 1 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு பிறகு அத்தனை நீரும் கடலுக்கு தான் செல்ல இருக்கிறது. இத்தனை ஆண்டு காலம் ஆட்சி செய்தும் இந்த நீரை எப்படி பயன்படுத்த வேண்டும் என இவர்கள் தெரிந்து கொள்ளவில்லை.
பல்வேறு திட்டங்கள் நிலுவையில் உள்ளன. அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. குறிப்பாக தர்மபுரி காவேரி உபரி நீர் திட்டம், மேட்டூர் சேலம் உபரி நீர் திட்டம், அத்திக்கடவு அவிநாசி திட்டம், நல்லாரு பாம்பாறு திட்டம். குறிப்பாக, காவிரி குண்டாறு திட்டம் ஆறு மாவட்டத்திற்கு கரூர் நீர் ஆதாரமாக உள்ள திட்டமாகும். 17,000 கோடி நிதி அறிவிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
வேண்டுமென்று தமிழக அரசு புதிய மின் திட்டங்களை தொடங்க தயங்குகிறது. காரணம் தனியாரிடமிருந்து அதிக கமிஷன் கிடைக்கும் என்பது தான்.
கோவை மாநகரில் 80 விழுக்காடு சாலைகள் பழுதடைந்துள்ளது. ஏன் கோவை மேயர் பதவி விலகினார் என விசாரணை நடத்த வேண்டும். வெள்ளலூரில் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க பல லட்சம் செலவழிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகளில் உரிய விசாரணை செய்து தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்திக்கடவு அவினாசி திட்டம் எப்போதுதான் கொண்டுவர போகிறார்கள்? என்ன பிரச்சனை? 1500 கோடி ரூபாய்க்கு தான் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அரைகுறையாக செய்து அதை இன்னும் முடிக்கவில்லை. தென்மேற்கு பருவமழை வரும் சூழலில் தண்ணீரை கடலுக்கு அனுப்பிவிட்டு வரட்சி என்ற சூழல் உருவாக்குவது, இந்த அரசுக்கு நிர்வாகத் திறமை இல்லை என கூறலாம்.
தமிழக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உடனடியாக அறிவிக்க வேண்டும். இதற்கு முக்கிய காரணமாக தமிழகத்தில் 69 இட ஒதுக்கீடு ரத்து ஆகக்கூடிய சூழல் வந்துள்ளது. இது மிக முக்கியமான ஒரு பிரச்சினையாகும். உச்சநீதிமன்றத்தில் இருக்கின்ற வழக்கு நிலுவையில் உள்ளது. அதை எப்போது வேண்டுமானாலும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழக்கை எடுக்கும்போது முதல் கேள்வியாக ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினீர்களா என கேட்பார்கள். எந்த அதிகாரத்தில் எந்த இட ஒதுக்கீடு சட்டம் இருக்கிறது என கேள்வி கேட்பார்கள்.
பிஹார், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, ஒரிசா, ஜார்கண்ட் மாநிலங்களில் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இவ்வளவு மாநில முதல்வர்களுக்கும் அதிகாரம் இருக்கும்போது தமிழக முதல்வருக்கு இல்லை என சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் காரணமாக இந்த விவகாரத்தில் முதல்வர் தயங்குகிறார். இது சமூகநீதி பிரச்சனையாகும். மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் கூறுகிறார். மத்திய அரசு செய்வது மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும்.
தமிழகத்தின் உரிமைகளை எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்க முடியாது. கோயம்புத்தூர் மெட்ரோவிற்கு சண்டை போட்டு கட்டாயம் நி்தி வாங்குவோம்.
நீட் தேர்வு இருக்கக்கூடாது அது தேவையில்லாத தேர்வு என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. ஒவ்வொரு மாநிலத்திற்கும்
ஏற்ப அதன் கொள்கைகளை விட்டு விட வேண்டும். நீட் தேர்வு என்பது கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது,
இவ்வாறு அவர் கூறினார்.