மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டம், மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கும் என தமிழக மக்கள் அனைவரும் நம்பி இருந்தனர். ஆனால் மத்திய அரசு தமிழ்நாட்டை கண்டுகொள்ளவே இல்லை.
மத்திய அரசின் இந்த ஓரவஞ்சனைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதே நேரத்தில் பாஜகவினர் மற்றும் அந்த கூட்டணி கட்சியினர் இந்த பட்ஜெட்டை வரவேற்று உள்ளனர்.
இந்த நிலையில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்க மறுத்த மத்திய அரசை கண்டித்து தமிழ்நாட்டில் இன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்தது. அதன்படி இன்று சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் நடந்த
ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் , திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
ஓரவஞ்சனை செய்யும் மோடி அரசே, தமிழக மக்களை ஏமாற்றாதே, என்று கோஷங்கள் போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தூத்துக்குடியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி. பங்கேற்றார். சென்னையில் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், மேயர் என திரளானோர் பங்கேற்றனர்.
திருச்சி பழைய கலெக்டர் அலுவலகம் அருகில் வடக்கு, மத்திய மாவட்டங்கள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் வைரமணி, காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ., ஆகியோர் தலைமை தாங்கினர். மேயர் அன்பழகன் முன்னிலை வகித்தார். எம்எல்ஏக்கள் சவுந்தரபாண்டியன், பழனியாண்டி, கதிரவன், ஸ்டாலின் குமார் மற்றும் பகுதி செயலாளா்கள் காஜாமலை விஜய், ராம்குமார், மோகன் தாஸ், முத்து செல்வம், கவுன்சிலர் கலைச்செல்வி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் தெப்பக்குளம் தபால்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர செயலாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. , கவிஞர் சல்மா, முன்னாள் எம்.எல்.ஏ. சேகரன், வண்ணை அரங்கநாதன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.