போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் புதிய பேருந்துகள் தொடக்க விழாவிற்காக 2 நாட்களுக்கு முன் தஞ்சாவூர் வருகை புரிந்தார். அப்போது தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயின்று வரும் மாணவர்கள் அமைச்சர் சிவசங்கர் மற்றும் எம்எல்ஏ டி .கே .ஜி நீலமேகம் ஆகியோரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் தாங்கள் தங்கி உள்ள விடுதியில் இருந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருவதற்கு மிகுந்த சிரமமாக உள்ளது. அதனால் புதிய பேருந்து நிலையம் வழியாக ஒரு பேருந்தை இயக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
இந்த மனு மீது அமைச்சர் மற்றும் எம்எல்ஏ ஆகியோர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகளின் நலன் கருதி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வஸ்தாச்சாவடி மாணவர் விடுதியில் இருந்து புதிய பேருந்து நிலையம் வழியாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புதிய நகரப் பேருந்தை எம் எல் ஏ டி கே ஜி நீலமேகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். தங்கள் கோரிக்கை மனு மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு ஒரே நாளில் புதிய பேருந்து இயக்கச் செய்த தமிழக அரசுக்கும், போக்குவரத்து அமைச்சருக்கும், எம்எல்ஏவுக்கும் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்