Skip to content
Home » ஒலிம்பிக்….. நதியில் நடந்த கண்கணவர் அணிவகுப்பு….தேசிய கொடி ஏந்தி வந்த சரத், சிந்து

ஒலிம்பிக்….. நதியில் நடந்த கண்கணவர் அணிவகுப்பு….தேசிய கொடி ஏந்தி வந்த சரத், சிந்து

  • by Senthil

உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில், பங்கேற்றுள்ளனர். இந்திய நேரப்படி நேற்று இரவு 11 மணிக்கு கண்கணவர் அணிவகுப்புடன் தொடக்க விழா நடந்தது. ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டியில் 32 வகையான விளையாட்டுகளில், 329 பந்தயங்கள் நடக்க உள்ளன. இந்தியா சார்பில் மொத்தம் 117 வீரர், வீராங்கனைகள் அடங்கிய குழுவினர் 16 வகை விளையாட்டுகளில் பதக்க வேட்டையில் இறங்குகின்றனர். பாரிஸ் மட்டுமல்லாது பிரான்சின் வேறு 16 நகரங்களிலும் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

கடந்த 24ம் தேதியே கால்பந்து, ரக்பி செவன்ஸ் உள்ளிட்ட சில போட்டிகள் தொடங்கிவிட்டன என்றாலும், அதிகாரப்பூர்வமான தொடக்க விழா இந்திய நேரப்படி நேற்று இரவு 11 மணிக்கு தொடங்கி மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக, தொடக்க விழாவில் பங்கேற்கும் நாடுகளின் வீரர், வீராங்கனைகள் அணிவகுப்பு அரங்கத்தில் இல்லாமல், பாரிஸ் நகரின் புகழ் பெற்ற ‘சென்’ ஆற்றில் நடைபெற்றது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் 100க்கும் அதிகமான படகுகளில் ஏறி ‘சென்’ ஆற்றில் பாரிஸ் நகரின் முக்கிய இடங்கள் வழியாக பயணம் செய்தது பார்வையாளர்களை  கவர்ந்தது.

ஆஸ்டர்லிட்ஸ் பாலத்தில் தொடங்கிய இந்த ‘மிதக்கும் அணிவகுப்பு’ புகழ் பெற்ற ஈபிள் கோபுரம் அருகே ட்ரோகடெரோ பகுதியில் நிறைவடைந்தது. ஆற்றின் கரையோரமாக அமைக்கப்பட்டிருந்த பார்வையாளர் மாடங்கள் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களால் நிரம்பி வழிந்தன. பாரிஸ் நகர் முழுவதும் இரவைப் பகலாக்கும் வண்ண வண்ண மின்விளக்குகள், லேசர் ஜாலங்களால் ஒளிர்ந்தது. தொடக்க விழாவை பார்த்து ரசிக்க சென் ஆற்றின் இரு  கரைகளிலும் 3.2 லட்சம் இருக்கைகள் கொண்ட கேலரிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . இது தவிர 80 ராட்சத திரைகளிலும் தொடக்க விழா நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின.

மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தின. டேபிள் டென்னிஸ் வீரர் அசந்தா சரத் கமல் மற்றும் பேட்மின்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து (பேட்மின்டன்) இந்திய தேசியக் கொடி ஏந்தி தலைமை வகிக்க, இந்திய குழுவினர் படகுகளில் உற்சாகமாக அணிவகுத்து வந்தனர். இந்திய வீரர்கள் பைஜாமா குர்தா அணிந்தும், வீராங்கனைகள் தேசியக் கொடியின் நிறங்களை பிரதிபலிக்கும் புடவை அணிந்தும் அணிவகுப்பில் பங்கேற்றது உலக அளவில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் முறைப்படி தொடங்கி வைத்தார். தொடர் ஓட்டமாக எடுத்து வரப்பட்ட ஒலிம்பிக் சுடர், பாரம்பரிய முறைப்படி பிரமாண்ட கொப்பரையில் ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், இங்கிலாந்து பிரதமர் ஸ்டாமர்,

ஜெர்மன் பிரதமர் ஸ்கோல்ஸ் உள்பட, உலகம் முழுவதும் இருந்து அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். தொடக்க விழாவையொட்டி பாரிஸ் நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பிரான்சில் சில ரயில் நிலையங்களில் தீ வைப்பு தாக்குதல்கள் நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து, பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்ட நிலையில், வண்ண மயமான வானவேடிக்கையுடன் தொடக்க விழா நிறைவடைந்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, இந்திய குழுவினர் தங்களின் பதக்க வேட்டையை இன்று தொடங்குகின்றனர்.

ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா இதுவரை 10 தங்கம், 9 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 35 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் டோக்கியோ 2020 ஒலிம்பிக்சில் 7 பதக்கங்களை வென்றதே இந்தியாவின் சிறந்த செயல்பாடாக உள்ளது. இம்முறை அந்த சாதனையை முறியடிப்பதுடன், முதல் முறையாக இந்தியா இரட்டை இலக்க எண்ணிக்கையில் பதக்கங்களை  பெறும் என்ற எதிர்பார்ப்பு இந்திய மக்களிடம் உள்ளது.

ஒலிம்பிக் போட்டிக்கு சென்றுள்ள  இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!