முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் இன்று (26.7.2024) சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக, டில்லி சாணக்யபுரியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தில் 257 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
18.06.2021 அன்று முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் டில்லி, தமிழ்நாடு இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில், டில்லி மிக தீவிர நில அதிர்வு மண்டலம் IV -ஆக மறுவகைப்படுத்தப்படுத்துள்ளதை கருத்தில் கொண்டு வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தினை பழைய கட்டடங்களை முழுவதுமாக இடித்து மறுமேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள விரிவான ஆலோசனை நடத்தினார். அதன்படி நில அதிர்வுகளை தாங்கும் வகையில், புதிய கட்டடங்களை கட்டுவதற்கு 257 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சாணயக்யபுரியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்லத்திற்கான மறுமேம்பாட்டு திட்டத்தில் கட்டப்படவுள்ள புதிய கட்டடங்களின் விவரங்கள் இப்புதிய கட்டடம் மிக முக்கிய பிரமுகர் தொகுதி (VVIP Block), விருந்தினர் மாளிகை தொகுதி (Guest Block) மற்றும் அலுவலர்கள் குடியிருப்புத் தொகுதி (Officers Quarters Block) ஆகியவற்றை உள்ளடக்கியது. இக்கட்டடம், 3 அடித்தளங்கள், தரைத்தளம் மற்றும் 7 மேல் தளங்களைக் கொண்டதாகவும், மொத்தம் 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்படவுள்ளது.
மேலும், மிக முக்கிய பிரமுகர் அறை, 39 முக்கிய பிரமுகர்கள் அறைகள், 60 உயர்தர அறைகள் (Deluxe Rooms), 72 படுக்கை வசதிகள் கொண்ட தங்கும் கூடம் (Dormitory), பல்நோக்கு அரங்கம், 3 உணவருந்தும் அறைகள், காத்திருப்பு அறைகள், கண்காட்சி அறை, மிக முக்கிய பிரமுகர்களின் முகாம் அலுவலகம், சந்திப்பு அறைகள், உடற்பயிற்சி மையம், வணிக மையம், நுாலகம் மற்றும் பல்வேறு வசதிகளுடன் இப்புதிய கட்டடம் கட்டப்படவுள்ளது.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித் துறை அமைச்சர் .எ.வ. வேலு, தலைமைச் செயலாளர்.சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்.மங்கத் ராம் சர்மா, பொதுத் துறை செயலாளர்.ரீட்டா ஹரீஷ் தக்கர், ., பொதுத் துறை அரசு துணைச் செயலாளர் (மரபு). ஜெ.இ. பத்மஜா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
காணொலிக் காட்சி வாயிலாக டில்லியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்.டி.ஆர். பாலு, ஆ. ராசா, திருச்சி சிவா, தொல் திருமாவளவன், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, சு. வெங்கடேசன், துரை வைகோ, வை. செல்வராஜ் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், டில்லி, தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் சாட்டர்ஜி, , கூடுதல் உள்ளுறை ஆணையாளர்.ஆஷிஷ் குமார், ., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.