மின் கட்டண உயர்வை கண்டித்தும், நியாய விலைக்கடைகளில் பொருட்களை முறையாக வழங்கக் கோரியும், விவசாயிகள் பயன்பெறும் வகையில் காவிரி நீரை பெற்றுத் தரக்கோரியும் தேமுதிக சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேமுதிக முக்கிய நிர்வாகிகள் கருப்பு நிற ஆடை அணிந்தபடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட தேமுதிக தொண்டர்கள், ஆளும் திமுக அரசை கண்டித்து பதாகைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தேமுதிகவை
சேர்ந்த பெண்கள் மின் கட்டண உயர்வை கண்டிக்கும் வகையில், அம்மிக்கல்லில் அறைத்தும் உரல் இடித்தும் நூதன முறையில் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.
தேமுதிக துணைச் செயலாளர் பார்த்தசாரதி கூறுகையில், “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ந்து மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி கடந்த இரண்டு மாதங்களாக நியாயவிலைக் கடைகளில் பாமாயில் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுவதில்லை என்றும் மக்கள் கூறுகிறார்கள். ஏழை மக்கள் மீது சுமையை ஏற்றுகின்ற இந்த செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது. திமுக அரசு மின் கட்டணத்தை திரும்பப் பெறுவதோடு நியாயவிலைக் கடைகளில் சரியான முறையில் பொருட்கள் கிடைக்க வழிவகுக்க வேண்டும். டெல்டா பகுதி விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவே திமுக அரசு, கூட்டணியில் இருக்கும் கர்நாடகா காங்கிரஸ் அரசிடம் பேசி காவிரி நீரை பெற்று தர வேண்டும்.” என்று கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், “திமுக ஆட்சிக்கு வந்தாலே ரவுடிகள் ராஜ்ஜியம் என்பார்கள், தற்போது திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து 590 கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது என்றும் சட்டம் ஒழுங்கு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே முதல்வர் தன் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை மூலம் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
போதைப் பொருட்கள் தமிழகம் முழுவதும் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது என்று கூறிய பார்த்தசாரதி, கஞ்சா மற்றும் போதை பொருட்களால் கல்லூரி மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் என்றும் இது குறித்து கேள்வி எழுப்பினால், ‘போதைப் பொருள் விற்பனை நடைபெறுவதில்லை’ என்று ஊடகங்களின் வாயிலாக திசை திருப்புகிறார்கள்.” என்றும் கூறினார்.