தஞ்சை கல்யாணசுந்தரம் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு மாணவி ஜனப்பிரியா (14). சமீபத்தில் நடந்த தஞ்சை சங்கமம் நிகழ்ச்சியில் சிறந்த ஓவியர் கலை இளமணி என்ற விருதை பெற்றார்.
மாணவி ஜனப்பிரியா சிறுவயதிலேயே ஓவியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டு தற்போது கலை இளமணி விருது, சான்றிதழ், பரிசு பணத்தை வென்றுள்ளார். ஜனப்பிரியாவின் தந்தை கோபி (44) டெய்லர். தாயார் கலைச்செல்வி (38). இவர்கள் இருவரும் ஜனப்பிரியாவின் ஆர்வத்திற்கு உறுதுணையாக உள்ளனர்.
ஓவியம் வரைதல், பரதநாட்டியம் என்று தன்னை தானே வளர்த்துக்கொண்ட ஜனப்பிரியாவிற்கு மார்டன் ஆர்ட் மீது தீராத ஆசை. அந்த ஆசை இன்று சாதனையாக மாறியுள்ளது. 2017ம் ஆண்டு வனத்துறை வாரவிழா நடத்திய ஓவியப்போட்டில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று சான்றிதழ் மற்றும் மெடல் பெற்ற ஜனப்பிரியா மேலும் மேலும் தன் திறமைகளை வளர்த்துக் கொண்டார். கொரோனா காலக்கட்டத்தில் பள்ளிக்கு விடுமுறை. ஆன்லைன் வகுப்பு மட்டும் நடந்த நேரத்தில் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு மாடர்ன் ஆர்ட் வரைய தஞ்சையை சேர்ந்த ஈஸ்வரன் மாஸ்டரிடம் பயிற்சி மேற்கொண்டார்.
இவரது மாடர்ன் ஆர்ட் ஓவியங்கள் வியக்க வைக்கிறது. அழகான கோலம் போல் தெரியும் ஓவியத்தில் திருநங்கையும், அன்னப்பறவையும் கொஞ்சுவதை உற்று நோக்கினால் பளிச்சென்று புலப்படும். யானையின் நிறம் கருமை. ஆனால் அனைத்து நிறங்களையும் பயன்படுத்தி தன் கற்பனையால் கலர் யானையை வரைந்து அசத்தியுள்ளார். விநாயகரும், கன்றுக்குட்டியும், தீபமும் பெண் முகமும், வண்ணப்படுக்கையில் முகம் மட்டும் தெரியும் பன்றிக்குட்டி என்று மாடர்ன் ஆர்ட்டில் அசத்துகிறார் ஜனப்பிரியா.
ஜவகர் சிறுவர் மன்றம் நடத்திய கோடைக்கால கலைப்பயிற்சி முகாம் போட்டியில் மாவட்ட அளவில் ஓவியப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். வீடு முழுவதும் சிறுவயது முதல் வாங்கிய மெடல்கள், சான்றிதழ்கள் என குவிந்துள்ளது. இப்படி மாவட்டம், மண்டலம் என்று ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற ஜனப்பிரியா கடந்த 2022ல் சென்னையில் மாநில அளவில் நடந்த ஓவியப்போட்டியில் விருதும், சான்றிதழும் பெற்று தன் பெற்றோருக்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார். தற்போது தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை மாவட்ட கலைமன்றம் சார்பில் சிறந்த ஓவியக்கலைஞர் கலை இளமணி விருதை பெற்றுள்ளார்.
இதுகுறித்து மாணவி ஜனப்பிரியா கூறுகையில், மாடர்ன் ஆர்ட்டில் மேலும் பல சாதனைகள் செய்ய வேண்டும் என்பதுதான் எனது ஆசை. தஞ்சை பெரிய கோயிலை மாடர்ன் ஆர்ட்டில் வரைய வேண்டும். கண்ணில் படும் காட்சிகளை மனதில் ஏற்றிக் கொண்டு அதை மாடர்ன் ஆர்ட்டில் வரைந்து சாதிக்க வேண்டும். பரத நாட்டியத்தில் எனக்கென்று தனியிடம் பிடிக்க வேண்டும் என்பதே நோக்கம். என்னுடைய இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம் எனது பெற்றோர் தான். அதிலும் அம்மாவின் பங்களிப்பு அதிகம். பெற்றோர் கொடுத்த உற்சாகமும், ஊக்கமும்தான் என்னை உயர்த்தி உள்ளது என்றார்.